பா.ம.க.,வுக்கு 10 தொகுதி தைலாபுரத்தில் ஒப்பந்தம் கையெழுத்து
பா.ம.க.,வுக்கு 10 தொகுதி தைலாபுரத்தில் ஒப்பந்தம் கையெழுத்து
UPDATED : மார் 20, 2024 12:48 AM
ADDED : மார் 19, 2024 11:26 PM

திண்டிவனம்: பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு, 10 தொகுதிகளை ஒதுக்கி இரண்டு கட்சிகள் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், நேற்று முன்தினம் மாலை கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.
தொடர்ந்து நடந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலர்கள் ஆலோசனை கூட்டத்தில், லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என, முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் நேற்று காலை, 6:40 மணிக்கு தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தனர்.
அவர்களை பா.ம.க., நிர்வாகிகள் வரவேற்றனர். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு அண்ணாமலை சால்வை அணிவித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து, ராமதாசின் மனைவி சரஸ்வதியின் காலில் விழுந்தும் ஆசி பெற்றார். அதை தொடர்ந்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, 10 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் ராமதாசும், அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.

