ADDED : செப் 24, 2024 07:23 AM
சென்னை,: பெங்களூரு முன்னணி ஜவுளி வணிகர்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதியாளர்கள், தமிழக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள, கைத்தறி ரகங்களை கொள்முதல் செய்ய, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும், கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க, மெட்ரோ நகரங்களில், வாங்குவோர் - விற்பனை செய்வோர் சந்திப்பு நடத்தப்படுகிறது.
பெங்களூரு, பசவனகுடி, பாய் விஸ்டா மண்டபத்தில், வாங்குபவர் - விற்பவர் சந்திப்பு நேற்று நடந்தது. அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள, தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் உருவாக்கிய, 1,000 புதிய வடிவமைப்புகள்; காஞ்சிபுரம், திருப்புவனம், ஆரணி பட்டு புடவைகள்; மென்மையான பட்டு வகைகள்.
சேலம் வெள்ளை பட்டு வேஷ்டிகள்; கோவை காட்டன் புடவைகள்; வீட்டு கைத்தறி பொருட்கள்; சுங்குடி சேலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
சந்திப்பின் போது, பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, முன்னணி ஜவுளி வணிகர்கள், கைத்தறி ஏற்றுமதியாளர்கள், 12 கோடி ரூபாய்க்கு கைத்தறி ரகங்களை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறித்துறை இயக்குனர் சண்முகசுந்தரம், கோ - ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் தீபக்ஜேக்கப் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.