வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வருமான வரி கட்ட நோட்டீஸ்
வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வருமான வரி கட்ட நோட்டீஸ்
ADDED : அக் 01, 2024 05:30 AM
அருப்புக்கோட்டை: தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வருமான வரி தாக்கல் செய்யவும், 2017 ல் இருந்து அபராதம் செலுத்தவும் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவை பயிர், நகை கடன் வழங்குதல், கால்நடை கடன் பயிர் காப்பீட்டு திட்டங்கள் செய்தல், அடமான கடன், ரேஷன் கடைகள் நடத்துவது போன்றவற்றை செய்து வருகின்றன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் சங்கங்களில் வாங்கிய தங்க நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. மேலும் வட்டி இல்லா கடன் வழங்குதல், ரேஷன் கடைகள் எடுத்து நடத்துவதால் ஏற்படும் நஷ்டம், உர விற்பனையில் நஷ்டம், இவற்றை ஈடுகட்ட மானியங்களை சரிவர வழங்கவில்லை. போதுமான லாபமின்றி பல சங்கங்கள் தள்ளாட்டத்தில் உள்ளன.
இந்நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 2017 லிருந்து கணக்கை தாக்கல் செய்யுமாறும், உரிய அபராதத்தை செலுத்துமாறும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அத்துடன் அபராதம் தொகையும் செலுத்த உத்தர விட்டுள்ளது. சங்கங்களை நடத்தவே திணறி வரும் நிலையில், புதியதாக வருமான வரி தாக்கல், அபராத தொகையுடன் கட்ட வேண்டும் என்ற நோட்டீசால் சங்கங்கள் அதிர்ந்து போய் உள்ளன.