sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிக லாபம் கிடைக்கும் மக்காச்சோளம் சாகுபடி வேளாண் பல்கலை பேராசிரியர் ஆலோசனை

/

அதிக லாபம் கிடைக்கும் மக்காச்சோளம் சாகுபடி வேளாண் பல்கலை பேராசிரியர் ஆலோசனை

அதிக லாபம் கிடைக்கும் மக்காச்சோளம் சாகுபடி வேளாண் பல்கலை பேராசிரியர் ஆலோசனை

அதிக லாபம் கிடைக்கும் மக்காச்சோளம் சாகுபடி வேளாண் பல்கலை பேராசிரியர் ஆலோசனை


ADDED : டிச 11, 2024 01:26 AM

Google News

ADDED : டிச 11, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:''மக்காச்சோளம் பயிரிட்டால், குறைந்த செலவில் அதிக லாபம் பெற முடியம்,'' என, கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் சிவகுமார் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், நெல் பயிர் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. அதற்கடுத்து கரும்பு, வாழை, மா போன்ற தோட்டக்கலை பயிர் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறி, பயறு வகை பயிர்களும், பூ வகைகளிலும் கணிசமாக பயிரிடப்படுகிறது.

தற்போது, கால்நடை, கோழி தீவனம், மதிப்பூட்டப்பட்ட உணவு வகை, எத்தனால் போன்றவற்றுக்கு, 50 லட்சம் டன் மக்காச்சோளம் அதிகம் தேவை. இதில், 30 லட்சம் டன் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தியாகிறது. மற்றவற்றுக்கு பிற மாநிலங்களை நம்ப வேண்டியுள்ளது. எனவே, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்க, வேளாண் துறை ஆர்வம் காட்டி வருகிறது.

இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலை சிறுதானிய பிரிவு தலைவரான பேராசிரியர் எஸ்.சிவகுமார் கூறியதாவது:

தமிழகத்தில் குறைந்த செலவில், தண்ணீர் குறைவாக இருக்கும் பகுதிகளில், மக்காசோள பயிர்களை எளிதாக சாகுபடி செய்யலாம். திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு போன்ற ஒன்றியங்களில், குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. அப்பகுதிகளில், சொட்டு நீர் பாசனம் வாயிலாக, மக்காச்சோளம் பயிரிடலாம்.

தற்போது, விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், இயந்திரம் வாயிலாக, விதை தெளிப்பு முதல் களையெடுப்பு, அறுவடை வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு, 50 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை. தற்போது, தமிழகத்தில், 30 லட்சம் டன் மட்டுமே உற்பத்தியாகிறது. மீதமுள்ள, 20 லட்சம் டன், ஆந்திரா, கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது.

மக்காச்சோளத்தில் 60 சதவீதம், கால்நடைகள், கோழித் தீவனம், மதிப்பூட்டப்பட்ட உணவு வகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது, எத்தனால் உற்பத்திக்கும், மதுபான உற்பத்திக்கும் கரும்பு சக்கைக்கு மாற்றாக, மக்காச்சோள சக்கை பயன்படுத்தப்படுகிறது.

மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், 'இ - 20' என்ற திட்டம் வாயிலாக, பெட்ரோலுடன் பயோ - எத்தனால் கலந்து விற்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. எதிர்காலத்தில், 'இ - 30' என்ற திட்டம் வாயிலாக, பெட்ரோல், டீசலுடன் பயோ - எத்தனால் பயன்படுத்தும் திட்டத்தை வகுத்துள்ளது.

தமிழகத்தில், மத்திய அரசு அனுமதியுடன் தற்போது ஆறு இடங்களில், எத்தனால் தொழிற்சாலை செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஒரு எத்தனால் தொழிற்சாலை செயல்படுகிறது.

எத்தனால் தயாரிப்பதற்காக, மக்காச்சோளத்திற்கு சந்தை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ மக்காச்சோளம் சக்கைக்கு, 22.25 ரூபாய் விலையாக வழங்கப்படுகிறது. மக்காச்சோளம் உற்பத்தி அதிகரித்தால், அதன் விலையும் அதிகரிக்கும்.

நாளொன்றுக்கு, 1.5 - 2.5 லட்சம் லிட்டர் எத்தனால் தயாரிக்க, 500 டன் மக்காச்சோள சக்கை தேவை. ஆண்டுக்கு, 10 லட்சம் டன் மக்காச்சோளம் சக்கை, எத்தனால் தொழிற்சாலைகளுக்கு தேவை..

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்காச்சோள உற்பத்தியை பெருக்க, மத்திய அரசு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி, விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை வழங்கப்பட உள்ளது.

வரும் ஜனவரில், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு, கோவை வேளாண் பல்கலை சிறுதானிய துறை வாயிலாக, மக்காச்சோளம் பயிரிடுவது மற்றும் அதன் வாயிலாக சந்தை வாய்ப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டு போக நெல்


விவசாயிகளுக்கும் பயன் திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று போகம் நெல் பயிரிடும் பகுதி குறைவாகவும், இரண்டு போகம் மட்டுமே நெல் பயிரிடும் விவசாய பகுதிகள் அதிகமாக உள்ளது. மூன்றாவது போகத்தில், மாற்று பயிராக மக்காச்சோளம் பயிரிடலாம். இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். இதுகுறித்தும், வேளாண் துறையினர் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.








      Dinamalar
      Follow us