பட்ஜெட் பேக்கேஜ் வேளாண் பட்ஜெட்டில் கொங்கு மண்டலம் புறக்கணிப்பு விவசாய சங்க தலைவர்கள் ஆதங்கம்
பட்ஜெட் பேக்கேஜ் வேளாண் பட்ஜெட்டில் கொங்கு மண்டலம் புறக்கணிப்பு விவசாய சங்க தலைவர்கள் ஆதங்கம்
ADDED : மார் 15, 2025 11:32 PM

வெற்று அறிவிப்பு மட்டுமே!
கடந்த, நான்கு ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் எதையெல்லாம் சொன்னார்களோ, அதை செய்ய வில்லை. ஓட்டு வங்கிக்காக, எதை செய்தால் போதுமே, அதை மட்டும் செய்து கொண்டு வருகின்றனர். தமிழகத்தில், மனிதவளம், கல்வி மற்றும் 'டாஸ்மாக்' என மூன்று விதத்தில் முறைகேடு நடக்கிறது. அமலாக்கத்துறையினர் சோதனையில், 'டாஸ்மாக்'கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வரும் தேர்தலில், இந்த பணம் தான் மீண்டும் ஓட்டுக்களை பெறுவதற்கு அடிப்படையாக இருக்கப் போகிற நோக்கில் தி.மு.க., உள்ளது. சிறையில் இருந்து ஒரு அமைச்சர் வந்த உடனே, மீண்டும் அந்த அமைச்சருக்கு, அதே பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என்பதும் கூட வெறும் 'டிரெய்லர்' தான். இன்னமும் நிறைய வெளிவர உள்ளது. தமிழக வேளாண் பட்ஜெட் என்பதும் வளர்ச்சி பணிக்கான, திடமான அறிவிப்பு இல்லை. இவர்கள் சொல்வது வெற்று அறிவிப்பு மட்டும்தான்.
- நாகராஜ், பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர்
ஊழலுக்கு வழி வகுக்கும்
பல லட்சம் விவசாயிகள் உள்ள தமிழகத்தில், 17,000 விவசாயிகளுக்கு மட்டும் மானியத்துடன் வேளாண் கருவிகள் வழங்கப்படுவதாக சொல்வது ஏமாற்று வேலை. நல்லுார் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வரவேற்கலாம். ஆனால், இதனை தமிழக அரசு எவ்வாறு செய்ய முடியும் என்பது கேள்விக்குறி. நீர்நிலைகள் துார்வார, 13 கோடி ரூபாய் என்பது ஊழலுக்கான திட்டம். பட்ஜெட்டில், 50 சதவீத அறிவிப்புகள் பயனுள்ளவை. மீதமுள்ள, 50 சதவீத அறிவிப்புகள் ஊழலுக்கு வழிவகுக்கும். ரேஷனில் தேங்காய் எண்ணெய், பாண்டியாறு- - புன்னம்புழா, ஆனைமலையாறு - -நல்லாறு, கள் அனுமதி ஆகிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெறாதது வழக்கம்போல் ஏமாற்றமே!
- செல்லமுத்து,உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர்
பச்சைத்துண்டால் பயனில்லை
கள்ளுக்கான தடை நீக்கம், நீர் ஆதாரத்தை பெருக்கும் திட்டம், பால் விலை உயர்வு ஆகிய அறிவிப்பு இடம்பெறவில்லை. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை பின்பற்றி, விளை பொருட்களுக்கு விலை கிடைக்க அறிவிப்பு வெளியிடாமல், அவரது பெயரை மட்டும் எதற்காக பயன்படுத்த வேண்டும். நீர்நிலைகளை மீண்டும் மீண்டும் துார்வாரும் திட்டம் ஊழலுக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் நீண்ட காலமாக சொல்லப்படும், ஆனைமலை-யாறு - நல்லாறு திட்ட அறிவிப்பு இல்லை. எனவே, பச்சைத்துண்டு அணிந்து வெளியிடப்பட்ட பயனற்ற பட்ஜெட்டாகவே இதனை கருதுகிறோம்.
- ஈஸ்வரன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க, மாநில ஊடகப்பிரிவு செயலர்