தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வேளாண் பட்ஜெட் தலைவர்கள் கருத்து

வேளாண் பட்ஜெட் தலைவர்கள் கருத்து

வேளாண் பட்ஜெட் தலைவர்கள் கருத்து


ADDED : பிப் 21, 2024 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும். ஒரு டன் கரும்புக்கு, ஆதார விலையாக 4,000 ரூபாய் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது; அதை செய்யவில்லை.

இயற்கை விவசாயத்திற்கு, வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை; நிதி ஒதுக்கீடும் இல்லை. சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. கிராமத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.

* த.மா.கா., தலைவர் வாசன்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முக்கிய அம்சங்கள் இல்லை. புதிய அறிவிப்புகள் பல இருந்தாலும், அவையெல்லாம் கடந்த கால வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்று, செயல்படாமல் போனதுபோல அமைந்து விடக் கூடாது என்பதில், அரசு கவனமாக இருக்க வேண்டும்.

விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்த விவசாயக் கடன் தள்ளுபடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீட்டு தொகை, நெல்லுக்கும் கரும்புக்கும் தேங்காய்க்கும் ஆதார விலை சம்பந்தமான அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்பது, ஏமாற்றத்தை தருகிறது.

* தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ்: மத்திய அரசின் திட்டங்கள் 70 சதவீதம் 'காப்பி' அடிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள திட்டங்கள், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் நடக்கும் திட்டங்கள்.

உதாரணமாக, மண்புழு உரம், மண்வள அட்டை மற்றும் வேளாண் காடுகள் திட்டம் அனைத்தும், மத்திய அரசின் திட்டங்கள். முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டமும் மத்திய அரசின் திட்டம் தான்.

பண்ணைக் குட்டை, சொட்டு நீர், வேளாண் உட்கட்டமைப்பு போன்றவை, மத்திய அரசின் திட்டங்கள். அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, 5,999 கோடி ரூபாய். அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முறைகேடு செய்ய எளிமையாக வழிவகுப்பவை.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:

விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை மட்டுமே வழங்கியுள்ளது. விளை பொருட்களுக்கு உரிய விலை, நெல்லுக்கு குவிண்டாலுக்கு 3,000 ரூபாய், கரும்புக்கு டன்னுக்கு 5,000 ரூபாய், பழங்கள், காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயம், ரேஷனில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், மழை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாய் நிவாரணம் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. விவசாயிகளின் நலனைக் காப்பதில், தமிழக அரசு தோற்று விட்டது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்:

வேளாண் பட்ஜெட் விவசாயிகள் இடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வேளாண்மைக்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுகிறது என்ற பெருமையை தவிர, வேறு பயன் எதுவும் இல்லை. விவசாயிகளின் நலன்களை பூர்த்தி செய்யாத அறிக்கையாக உள்ளது.

* தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: நிதி ஆதாரம் மோசமாக இருந்தாலும், மத்திய அரசு வஞ்சித்தாலும், நிதி தர மறுத்தாலும், இருக்கிற நிதியில், வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

மண் வளத்தை பாதுகாத்து மனித உயிரை பாதுகாக்கும் திட்டம் உட்பட பல பாதுகாப்பு ஆதாரங்களை முதல் முறையாக அறிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது.

* பா.ஜ.,- எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்: தொலைநோக்கு திட்டங்கள் இல்லாமல், கம்பராமாணயம், சீவக சிந்தாமணி, புறநானுாறு, திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பாடல்களை எடுத்து போட்டு, மத்திய அரசின் திட்டங்களை எடுத்து, பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளனர். பட்ஜெட்டில் 60 முதல் 70 சதவீத இடங்களில், மத்திய, மாநில அரசு நிதயில் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு, பெரும்பாலான மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. விவசாய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. லாபம் இல்லாத தொழிலாக விவசாயம் உள்ளது. இவற்றுக்கு தீர்வு காணும் விஷயம் பட்ஜெட்டில் இல்லை.

* அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: விவசாயிகள் எதிர்பார்த்த எந்த திட்டங்களும் இல்லாத வேடிக்கை பட்ஜெட்டை, தி.மு.க., அரசு தாக்கல் செய்துள்ளது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us