குறுவை தொகுப்பு பயனாளிகள் தேர்வு ரூ.160 கோடி பெற வேளாண் துறை முடிவு
குறுவை தொகுப்பு பயனாளிகள் தேர்வு ரூ.160 கோடி பெற வேளாண் துறை முடிவு
ADDED : மே 05, 2025 01:27 AM

சென்னை: குறுவை தொகுப்பு திட்ட பயனாளிகள் தேர்வை துவங்கியுள்ள வேளாண் துறையினர், அரசிடம் நிதி பெறும் முயற்சியில் இறங்கிஉள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் குறுவை பருவ நெல்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதற்காக நடப்பாண்டு, 58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதியில், விவசாயிகளுக்கு நெல் இயந்திர நடவு மானியம், தரமான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
நடப்பாண்டு முதல், நெல் அதிக சாகுபடி நடக்கும் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 102 கோடி ரூபாய் வழங்கப்படும் என, வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறுவை சாகுபடியை விவசாயிகள் துவங்கும் நேரத்தில், சாகுபடி உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை மனதில் வைத்து, மாநிலம் முழுதும் டெல்டா சாகுபடி நடக்கும் மாவட்டங்களில் பயனாளிகள் தேர்வை, வேளாண் துறையினர் துவக்கியுள்ளனர்.
இதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்கு, 160 கோடி ரூபாய் நிதியை பெறுவதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளனர். அடுத்த, 10 நாட்களுக்குள், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறுவை சாகுபடிக்கு முன்பாக நிலத்தை பண்படுத்தும் வகையில், கோடை உழவு செய்யவும் விவசாயிகளுக்கு, வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.