ADDED : அக் 30, 2025 01:24 AM
சென்னை:பயிர் பாதிப்பு குறித்து, இரு வகையான கணக்கெடுப்புகளை மேற்கொள்ள வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு இயல்பை விட அதிக பரப்பளவில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. உற்பத்தியான நெல்லை, உணவுத்துறை முறையாக கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தியது. இதனால், மழையில் நனைந்து, பல டன் நெல் மூட்டைகள் முளைத்து உள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியதால், அறுவடைக்கு தயாராக இருந்த, 1.45 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. சம்பா சாகுபடி செய்யப்பட்ட 40 ஆயிரம் ஏக்கர் பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன.
குறுவை மற்றும் சம்பா பயிர்கள் பாதிப்பு குறித்து, இரண்டு வகையான கணக்கெடுப்புகள் நடத்த, வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீரில் மூழ்கியுள்ள பயிர்கள் குறித்தும், 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்துள்ள பயிர்கள் குறித்தும், தனித்தனியாக கணக் கெடுப்பு நடந்து வருகிறது.
வேளாண்மை, வருவாய் துறையினர் இணைந்து இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த, முதல் கட்ட அறிக்கையை, 2ம் தேதிக்குள் அனுப்ப, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை பெற்ற பின், பேரிடர் மேலாண்மை நிதியில், இழப்பீடு வழங்குவது குறித்து, அரசுக்கு வேளாண்துறை பரிந்துரைக்க உள்ளது.

