உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்க விவசாயிகளிடம் கெஞ்சும் வேளாண் துறை
உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்க விவசாயிகளிடம் கெஞ்சும் வேளாண் துறை
ADDED : மே 11, 2025 12:46 AM
சென்னை:உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்தை அதிகரிக்க, வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகளை சந்தித்து, அரசு வழங்கும் சலுகைகளை விளக்கி வருகின்றனர்.
விவசாயிகளிடம் குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்களை, கொள்முதல் செய்யும் கமிஷன் ஏஜன்டுகள் மற்றும் வியாபாரிகள், அதிக விலையில் விற்று லாபம் அடைகின்றனர்.
சிரமப்பட்டு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பல நேரங்களில் உரிய லாபம் கிடைப்பதில்லை.
முக்கியத்துவம் இல்லை
எனவே, விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு இடையே, கமிஷன் ஏஜன்டுகளை தவிர்த்து, நேரடி சந்தைப்படுத்துதலை ஏற்படுத்த, 1999ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் உழவர் சந்தைகள் துவக்கப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக உழவர் சந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
இதனால், அவை ஒப்புக்கு இயங்கி வந்தன. பல உழவர் சந்தைகள் சீரழிந்தன. அவற்றுக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வரத்தும் குறைந்தது.
கடந்த 2021ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், உழவர் சந்தைகள் செயல்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, சென்னை தவிர்த்து, 37 மாவட்டங்களில், 193 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.
உழவர் சந்தைகளை சீரமைக்க, 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உள்ளது. ஆனால், எதிர்பார்த்தபடி, உழவர் சந்தைகளுக்கு, காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலை பொருட்களின் வரத்து இல்லை.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற போது, '200 உழவர் சந்தைகள் புதிதாக துவக்கப்படும்' என, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
நான்கு ஆண்டுகளாகியும், புதிதாக உழவர் சந்தைகள் துவக்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால், பல உழவர் சந்தைகளையே மூடும் நிலை ஏற்படும்.
இதை அறிந்த அரசு, உழவர் சந்தைகளுக்கு, காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட பொருட்கள் வரத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கும்படி, வேளாண் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, வேளாண் வணிகப்பிரிவு அதிகாரிகள், தோட்டக்கலை பொருட்கள் அதிகம் விளையும் பகுதிகளுக்கு நேரில் சென்று, உழவர் சந்தைகளுக்கு காய்கறிகளை அனுப்பும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்து வருகின்றனர்.
கடைகள் ஒ துக்கீடு
இது குறித்து, வேளாண் வணிகப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
உழவர் சந்தைகளில், 10 கோடி ரூபாயாக இருந்த ஒரு நாள் வர்த்தகம் படிப்படியாக குறைந்து வருகிறது.
எனவே, விவசாயிகளை சந்தித்து, உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் அனுப்பினால், அரசு பஸ்களில் கட்டணமில்லாமல் பொருட்களை எடுத்து செல்லலாம் என்பது உட்பட, அரசு வழங்கும் சலுகைகளை எடுத்துக் கூறி வருகிறோம்.
மேலும், புதிய விவசாய கடன் அட்டை, உழவர் சந்தை உறுப்பினர் அட்டை, சாகுபடி உதவிகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி வருகிறோம். உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு, கடைகள் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துஉள்ளோம்.
இதற்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. பல விவசாயிகள் உழவர் சந்தைகளுக்கு பொருட்களை எடுத்து வருவதாக உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.