காவல் நிலைய 'சிசிடிவி'யில் விரைவில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
காவல் நிலைய 'சிசிடிவி'யில் விரைவில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
ADDED : அக் 01, 2025 07:22 AM

சென்னை: காவல் நிலைய, 'சிசிடிவி'க்களில், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதால், தமிழகத்தில் அதற்கான பணிகளை துவங்க ஆய்வு நடக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில், எட்டு மாதங்களில் போலீஸ் காவலில், 11 பேர் மரணமடைந்தது பற்றி, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்துவிசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையின் போது, 'காவல் நிலையங்களில் உள்ள, 'சிசிடிவி கேமரா' பதிவுகளில், மனித தலையீடு இல்லாமல், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக, ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வசதி செய்ய வேண்டும். 'சிசிடிவி' காட்சிகளை கண்காணிக்கும் மென்பொருளை, ஐ.ஐ.டி.,யிடம் இருந்து பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது.
இதை நடைமுறைப்படுத்த, தமிழகத்தில் காவல் நிலையங்களில் உள்ள, 'சிசிடிவி'க்கள் செயல்பாட்டில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு பணி நடந்து வருகிறது. காவல் துறை அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள, 'சிசிடிவி'க்களை கண்காணிக்க, மாநில மற்றும் மாவட்ட அளவில் மேற்பார்வை குழுக்கள் உள்ளன. இதில் உள்துறை, காவல் துறை, நிதித்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்டோர் உள்ளனர்.
இக்குழுவினர் மாநிலம் முழுதும் உள்ள, 1,500க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.