ADDED : ஜூலை 03, 2025 01:08 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் பாதுகாப்பு நிறுவன தற்காலிக ஊழியர் அஜித்குமார், பக்தர் ஒருவரின் காரில் நகை திருடியதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக நீதி வேண்டி, அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து திருப்புவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதில், ஏராளமானோர் கலந்து கொண்டதால், திருப்புவனம் ஸ்தம்பித்தது.
அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி., உதயகுமார், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, சிவகங்கை மாவட்ட செயலர் செந்தில்நாதன், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின், உதயகுமார், அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

