அ.தி.மு.க., -- பா.ஜ., வை தனிமைப்படுத்த தி.மு.க., திட்டம்
அ.தி.மு.க., -- பா.ஜ., வை தனிமைப்படுத்த தி.மு.க., திட்டம்
UPDATED : ஜூலை 31, 2025 03:57 AM
ADDED : ஜூலை 31, 2025 01:33 AM

சென்னை: வேறு கட்சிகள் இணையாமல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை தனிமைப்படுத்த, தி.மு.க., வியூகம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகிஉள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தல் பணிகளை துவங்கியுள்ள முக்கிய அரசியல் கட்சிகள், கூட்டணி தொடர்பாக திரைமறைவில் பேச்சுகளை நடத்தி வருகின்றன.
எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் தி.மு.க., உறுதியாக உள்ளது. 2019ல் அமைந்த தி.மு.க., கூட்டணி சிதறாமல் அப்படியே இருந்தாலும், தி.மு.க.,வின் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியில், சிறு சேதாரத்தையாவது விஜய் ஏற்படுத்துவார் என்ற அச்சம் தி.மு.க.,வினரிடம் உள்ளது.
இச்சூழலில், அ.தி.மு.க., வலுவான கூட்டணியை அமைத்து விட்டால், ஆட்சியை இழக்க நேரிடும் என்ற அச்சம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 11ல் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க., கூட்டணியில், மூன்றரை மாதங்கள் கடந்தும், வேறு கட்சிகள் இன்று வரை இணையவில்லை.
கடந்த ஏப்ரல் 11ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோதே, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைய இருப்பதாக கூறப்பட்டது; ஆனால், அது நடக்கவில்லை. இதன் பின்னணியில் தி.மு.க., இருப்பதாக கூறப்படுகிறது.
ராமதாஸ் -- அன்புமணி மோதல் முடிவுக்கு வராததால், பா.ம.க., இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி., பதவி தராததால், தே.மு.தி.க.,வும் பழனிசாமி மீது கோபத்தில் உள்ளது.
த.வெ.க., அல்லது நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மெகா கூட்டணி அமைப்போம்' என கூறி வருகிறார்.
அவரின் இந்த முயற்சியை முறியடிக்க, பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வாய்ப்புள்ள கட்சிகளை, தி.மு.க., கூட்டணியில் சேர்ப்பது அல்லது த.வெ.க., கூட்டணிக்கு அனுப்பி விடுவது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை, தி.மு.க., வகுத்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க, பா.ஜ., எவ்வளவோ முயற்சித்தும் பழனிசாமி மறுத்து வருகிறார்.
'இதனால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அ.தி.மு.க., கூட்டணி இழப்பை சந்திக்கும். பா.ம.க., இல்லாவிட்டால் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றியும் கிடைக்காது.
'வேறு கட்சிகள் இணையாமல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை தனிமைப்படுத்தும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்' என்றனர்.