அ.தி.மு.க., 'மாஜி'க்கு பொறுப்பாளர் பதவி பெருந்துறை தி.மு.க., செயலர் ராஜினாமா?
அ.தி.மு.க., 'மாஜி'க்கு பொறுப்பாளர் பதவி பெருந்துறை தி.மு.க., செயலர் ராஜினாமா?
ADDED : பிப் 17, 2025 04:23 AM

ஈரோடு: அ.தி.மு.க.,வில் இருந்து வந்த முன்னாள் அமைச்சருக்கு, தி.மு.க.,வில் மாவட்டச் செயலர் பதவி வழங்கியதால், பெருந்துறை ஒன்றிய தி.மு.க., செயலர் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளது, கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி சட்டசபை தொகுதிகளை ஒன்றிணைத்து, தி.மு.க.,வில் சமீபத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.
அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், பெருந்துறை ஒன்றிய தி.மு.க., செயலராக உள்ள கே.பி.சாமி, 59, தன் கட்சி பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதனால், தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க., வினர் கூறியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலத்தால், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. அ.தி.மு.க., தொகுதியை கைப்பற்றியது.
இந்நிலையில், தி.மு.க.,வில் இணைந்த வெங்கடாசலத்துக்கு, கட்சியில் வேறுவழியின்றி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்து வரும் ஒன்றிய செயலர் கே.பி.சாமி போன்ற கட்சிக்காரர்களுக்கு, தி.மு.க., தலைமை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், கட்சியில் இருந்து விலக கே.பி.சாமி முடிவெடுத்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒன்றிய செயலர் கே.பி.சாமி கூறுகையில், “என் அதிருப்தியை கட்சி தலைமை மற்றும் லோக்கல் அமைச்சர் முத்துசாமியிடமும் சொல்லி விட்டேன். கடந்த 45 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். அதில், 25 ஆண்டுகளாக ஒன்றிய செயலராக உள்ளேன். தலைமை சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், அதிரடியாக முடிவெடுப்பேன்,” என்றார்.

