அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை சரிவு: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை சரிவு: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : ஏப் 25, 2025 01:02 AM
சென்னை:''அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது,'' என, சட்டசபையில் அ.தி.மு.க., குற்றம் சாட்டியது.
சட்டசபையில் நேற்று, உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - கே.பி.அன்பழகன்: தேசிய உயர் கல்வி சேர்க்கையில், 2019 - 20ல், 51.3 சதவீதமாக இருந்த தமிழகத்தின் பங்களிப்பு, தற்போது, 47.1 சதவீதமாக குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதே இதற்கு காரணம்.
அமைச்சர் கோவி.செழியன்: தரவுகளின் அடிப்படையில், தமிழகம் உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம் பிடித்துள்ளது. அரசு கல்லுாரிகளில், 10,000 பேர் விண்ணப்பித்தால், 3,000 பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது.
அதை உயர்த்த, 'ஷிப்ட் 2' முறையை அறிமுகப்படுத்துவதுடன், ஐந்து நவீன பாடங்களையும் கொண்டு வர உள்ளோம். அந்த வகையில், கடந்த ஆட்சியை விட, இந்த ஆட்சியில் உயர் கல்வியின் தரம் மேம்பட்டுள்ளது.
அன்பழகன்: கருணாநிதி பெயரில் பல்கலை அமைக்கும் முடிவில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கல்வியில் பின்தங்கிய பகுதியான விழுப்புரத்தில், ஜெயலலிதா பெயரில் துவக்கப்பட்ட பல்கலையை எதற்காக மூடினீர்கள்?
அமைச்சர் கோவி.செழியன்: ஜெயலலிதாவின் பெயரில், இசை பல்கலை, மீன்வள பல்கலைகள் உள்ளன. அவற்றுக்கான பெயர் வைக்கும் கோப்பு, கவர்னர் மாளிகையில் உறங்கிய நிலையில், உரிமை போராட்டம் நடத்தி, பெயரை மீட்டவர் முதல்வர் ஸ்டாலின்.
எனவே, அந்த பல்கலையை நாங்கள் மூடவில்லை. நீங்கள் அரசு நிதியை, ஜெயலலிதாவின் பெயரில் வீணடித்தீர்கள்.
நாங்கள் அதை, அண்ணாமலை பல்கலையுடன் இணைத்து விட்டோம். இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
அன்பழகன்: புதிய பல்கலைகள் வரும் போது தான், புதிய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 1,146 பேரை பணி நியமனம் செய்யும் அரசாணையை செயல்படுத்தாதது ஏன்?
அமைச்சர் கோவி.செழியன்: இந்த ஆட்சியில், 4,000 உதவி பேராசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதில், 1,146 பேரும் அடக்கம். ஆனாலும், அவர்கள் நீதிமன்றம் சென்றதால், நியமிக்க முடியவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.