பசப்பு வார்த்தைகளை பேசி தி.மு.க., அரசு நாடகமாடுகிறது அ.தி.மு.க., குற்றச்சாட்டு
பசப்பு வார்த்தைகளை பேசி தி.மு.க., அரசு நாடகமாடுகிறது அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : அக் 26, 2025 01:18 AM
சென்னை:'நெல் கொள்முதல் செய்யாமல், பசப்பு வார்த்தைகள் பேசி, தி.மு.க., அரசு நாடகமாடி வருகிறது' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
பருவ மழையால், டெல்டா மாவட்டங்களில், நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளன. உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, விவசாயிகளை ஏமாற்றும் விதத்தில், பசப்பு வார்த்தைகளைப் பேசி நாடகமாடி வருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஈரப்பதத்தை காரணம் காட்டி, பெரும்பாலான விவசாயிகளிடம், கொள்முதல் செய்யாததால், 2 கி.மீ., தொலைவிற்கு குவித்து வைக்கப்பட்ட நெல், மழையில் நனைந்து முளைத்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்தார். அப்போது, தி.மு.க., அரசின் அலட்சியத்தால், தாங்கள் படும் அவலங்களை கண்ணீர் மல்க விவசாயிகள் கூறினர்.
நீரில் மூழ்கி, அழுகிய நெற்பயிர்களையும், கொள்முதல் நிலையங்களின் முன், கொட்டி வைத்து, முளைவிட்ட நெல்மணி களையும் காட்டினர்.
வயிறு எரிந்து, கொதித்து போய் நிற்கும், விவசாயிகளின் துயரை துடைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்காத, துணை முதல்வர் உதயநிதி, தஞ்சாவூருக்கு வந்து, ரயிலில், கொடியசைத்து, 4,000 டன் நெல்லை அனுப்பி வைத்துள்ளார்.
கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே, மழையில் முளைத்து கிடக்கும் பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை பார்க்கும்போது, 4,000 டன் என்பது மிகவும் சொற்பமே.
டெல்டா விவசாயிகளுக்கு ஆறுதல் கூற, தெம்பில்லாத முதல்வரும், அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்களும், தவறை பூசி மெழுகி மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

