பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வலுக்கட்டாயமாக அமைத்துள்ளனர்: கார்த்தி
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வலுக்கட்டாயமாக அமைத்துள்ளனர்: கார்த்தி
ADDED : ஏப் 17, 2025 06:52 PM
காரைக்குடி:''தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி வெற்றி பெறும்,'' என, காரைக்குடியில் காங்., -- -எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
அ.தி.மு.க., கூட்டணி குடும்பச்சண்டை குறித்து கருத்து கூற முடியாது. அ.தி.மு.க., கடந்த முறை பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததை சிறுபான்மையினர், தமிழ் உணர்வு உடையவர்கள் உட்பட யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
தவிர, அ.தி.மு.க., தொண்டர்களும் கூட்டணியை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான், கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பிரிந்தார்கள். ஆனால், இன்று தேர்தல் அரசியலை தாண்டி, வலுக்கட்டாய காரணங்களுக்காக, இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியை காட்டி, கடத்திச் சென்று, கட்டாய திருமணம் செய்வதை போன்றது தான் இந்த கூட்டணி. இண்டி கூட்டணியில் இருப்போர் யாரும், அ.தி.மு.க., கூட்டணியை பற்றி கவலைப்படவில்லை. எந்த கட்சி, யாரோடு கூட்டணி வைத்தாலும், தமிழகத்தில் 'இண்டி' கூட்டணி தான் வெற்றி பெறும்.
பள்ளி மாணவர்கள் மோதல் குறித்து படித்தேன். சமுதாய மாற்றத்தை, அரசு மட்டுமே கொண்டு வர முடியாது. சமுதாய மாற்றத்தை, சமுதாயம் தான் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.