அ.தி.மு.க.,வும், விஜய் கட்சியும் ஆடு புலி ஆட்டம் : பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., மறைமுகம்
அ.தி.மு.க.,வும், விஜய் கட்சியும் ஆடு புலி ஆட்டம் : பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., மறைமுகம்
UPDATED : ஜூலை 18, 2025 11:59 PM
ADDED : ஜூலை 18, 2025 11:46 PM

சென்னை : அ.தி.மு.க.,வும், விஜய் கட்சியும், ஆடு புலி ஆட்டம் ஆடி வருகின்றன. 'கூட்டணியில் பா.ஜ., இருந்தால், நாங்கள் வர மாட்டோம்' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறுவதால், 'நீங்க வேண்டாம்' என, பா.ஜ.,வுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறைமுகமாக உணர்த்தி வருகிறார். இந்த ஆட்டத்தின் முடிவு அடுத்தடுத்த நகர்வுகளில் தெரிய வரும்.
தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், 'ஓரணியில் தமிழ்நாடு' என, ஆளும் தி.மு.க.,வும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளன.
இதனால், தமிழக அரசியல் களம், தற்போதே சூடுபிடிக்க துவங்கி உள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது அமைந்த, தி.மு.க., தலைமையிலான 10 கட்சிகள் கூட்டணி அப்படியே உள்ளது. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் இப்போது பா.ஜ., மட்டுமே உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், 'மெகா கூட்டணி அமைத்து, தி.மு.க.,வை தோற்கடிப்போம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆனால், தி.மு.க., கூட்டணியிலிருந்து, காங்கிரஸ், வி.சி., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை இழுக்க, எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை. அதனால், டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். கடந்த ஏப்ரல் 11ல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டது.
அப்போது, 'இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்' என்று பழனிசாமி கூறினார். ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும், எந்த கட்சியும் அ.தி.மு.க., அணிக்கு வரவில்லை.
இந்நிலையில், கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் நடந்த பிரசார பயண கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'கம்யூனிஸ்ட், வி.சி., போன்ற கூட்டணி கட்சிகள் மாநாடு நடத்தக்கூட, தி.மு.க., அரசு அனுமதி மறுக்கிறது.
'வி.சி., கொடிக்கம்பம் நட அனுமதி இல்லை. இவ்வளவு அசிங்கப்பட்டும், அவமானப்பட்டும், அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டுமா? அ.தி.மு.க., கூட்டணிக்கு வரும் கட்சிகளை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம். எங்கள் கூட்டணிக்கு பிரமாண்டமான கட்சி வரப்போகிறது' என்றார்.
பழனிசாமி கூறிய பிரமாண்டமான கட்சி த.வெ.க., தான் என்றும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க, அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
அதனால் தான், 'தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி' எனக் கூறும் அமித் ஷாவின் கருத்துக்கு மாறாக, 'அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும்' என, திரும்ப திரும்ப பழனிசாமி கூறி வருகிறார்.
'பா.ஜ., இருந்தால் நாங்கள் வர மாட்டோம்' என த.வெ.க., தலைவர் விஜய் கூறுவதால், பா.ஜ.,வை கழற்றி விட பழனிசாமி தயாராகி விட்டார்.
அதனால் தான், அமித் ஷாவின் கருத்துக்கு மாறாக தொடர்ந்து பேசி வருகிறார். இதன் வாயிலாக, 'நீங்க வேண்டாம்' என, பா.ஜ.,வுக்கு மறைமுக சேதி சொல்வதாக பலரும் கருதுகின்றனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு ஓட்டு வங்கி உள்ள தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வென்றது. இப்போது ராமதாஸ், அன்புமணி மோதலால், பா.ம.க., பழைய நிலைக்கு வருவது சந்தேகமாக உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இருந்து, வி.சி., கட்சியை இழுக்க முடியவில்லை, எனவே, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே, தி.மு.க.,வை தோற்கடிக்க முடியும் என பழனிசாமி உறுதியாக நம்புகிறார். ஆனால், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய் விரும்புகிறார்.
அது நடக்காது என்பதால், விஜயை கூட்டணிக்கு சம்மதிக்க வைத்து விடலாம் என்று நினைக்கிறார். பா.ஜ., இருந்தால் விஜய் வர மாட்டார். விஜய் வருவது உறுதியானால், பா.ஜ.,வை கழற்றி விடவும் பழனிசாமி தயங்க மாட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் துவங்கியுள்ள ஆடு புலி ஆட்டம், தமிழக அரசியலில் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது பா.ஜ., அதை முறியடிக்குமா என்பது, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் தெரிந்து விடும்.

