விழுப்புரத்தில் 21ல் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., அறிவிப்பு
விழுப்புரத்தில் 21ல் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., அறிவிப்பு
ADDED : டிச 18, 2024 07:34 PM
சென்னை:'பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து, விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பெஞ்சல் புயலையொட்டி பெய்த கன மழையால், எவ்வித முன் அறிவிப்புமின்றி, நள்ளிரவில் திடீரென சாத்தனுார் அணையில் இருந்து, 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து குடும்பங்களும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன.
அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத, தி.மு.க., அரசை கண்டித்தும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், வரும் 21ம் தேதி காலை 10:00 மணிக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.