ADDED : செப் 08, 2025 02:17 AM

சென்னை: அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை 117வது பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள், வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். இதில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும், பொதுக் கூட்டத்தில் பேசுவோர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் 15ம் தேதி தென் சென்னை வடக்கு, மேற்கு மாவட்டம் சார்பில் நடக்க உள்ள பொதுக் கூட்டத்தில், கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்க உள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதால், அவர் பெயர் பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.
ஈரோடு புறநகர் மாவட்டம் சார்பில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், அம்மாவட்ட பொறுப்பு செயலரான எம்.எல்.ஏ., செல்வராஜ், கட்சி செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றுவர். ஈரோடு மாநகர் மாவட்டம் நடத்தும் பொதுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் வேலுசாமி, ஆனந்தன், நடிகர் விஜய்கணேஷ், ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுவர்.