அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வரலாற்று பிழை: திருமாவளவன்
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வரலாற்று பிழை: திருமாவளவன்
UPDATED : ஏப் 20, 2025 05:54 AM
ADDED : ஏப் 19, 2025 07:36 PM

சென்னை:''பா.ஜ.,வுடன் அ.தி.மு.க, கூட்டணி வைத்திருப்பது வரலாற்று பிழை,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகள், ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் சக்தியாக உருவெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் நிலை கொண்டிருக்கும், ஈ.வெ.ரா., சமூக நீதி அரசியலை நீர்த்து போக செய்ய வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி, பா.ஜ., காலுான்ற நினைக்கிறது. பின், மற்றொரு திராவிட கட்சியையும் அழிக்க வேண்டும் என்பதே, அவர்களின் நோக்கம்.
தி.மு.க., - அ.தி.மு.க.,வை வலுவிழக்க செய்ய வேண்டும் என்பதை தாண்டி, சமூக நீதி அரசியலை வலுவிழக்க செய்ய வேண்டும் என்பதே, பா.ஜ.,வின் உள்நோக்கம். இதை அறிந்தும், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, அ.தி.மு.க., வரலாற்று பிழை செய்து விட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தபோதும், மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதை தாண்டி, பா.ஜ., ஓட்டு வங்கியை வலிமைப்படுத்துவதற்கு துணை போவதும் வரலாற்று பிழை.
தமிழர், சமூக நீதி நலன்கள் கருதி, கூட்டணி குறித்து அ.தி.மு.க., மீண்டும் சிந்தித்து மறுபரிசீலனை செய்வது, வரலாற்று தேவையாக உள்ளது. பா.ஜ., குறித்த முதல்வர் கருத்தை வரவேற்கிறேன்.
எல்லா நேரங்களிலும் விருப்பம்போல் தீர்ப்பை பெற்று கொள்ளலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, துணை ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இது உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது அல்ல; அரசமைப்பு சட்டத்துக்கே எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார்.

