UPDATED : ஏப் 12, 2025 12:11 AM
ADDED : ஏப் 11, 2025 11:35 PM

சென்னை, சென்னையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா - அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இடையிலான பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மீண்டும் ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த, இரு கட்சிகளும் கைகோர்த்துள்ள நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் பதவி, அண்ணாமலையிடம் இருந்து நயினார் நாகேந்திரனுக்கு கைமாறியது.
தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முடிவு செய்தன.
கடந்த மாதம் 25ம் தேதி, டில்லியில் அமித் ஷாவை சந்தித்த பழனிசாமி, மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்தும், அதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதித்தார்.
மனு தாக்கல்
என்ன பேசப்பட்டது என்பது குறித்து, இரு கட்சிகளும் அறிவிக்காத போதிலும், தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதே, பழனிசாமி வைத்த முக்கிய நிபந்தனை என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அமித் ஷா சென்னை வந்தார். அதையடுத்து, நேற்று முழுதும் அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் அரங்கேறின.
அமித் ஷாவுடன் பழனிசாமி போனில் பேசினார். அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ., தலைவர் தேர்தலுக்கான மனு தாக்கல் நடந்தது. அக்கட்சி எம்.எல்.ஏ.,வான நயினார் நாகேந்திரன் மட்டும் மனு தாக்கல் செய்தார்.
தலைவர் போட்டியில் அண்ணாமலை இல்லை என்பது உறுதியானதும், தன் கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷாவை சந்திக்க, அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தார் பழனிசாமி. இருவரது சந்திப்பு முடிந்ததும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவான தகவலை, அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அமித் ஷா அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயகக் கூட்டணி விழாவுக்கு அழைக்கிறோம். பங்குனி உத்திர விழா நல்வாழ்த்துகள். பா.ஜ., - அ.தி.மு.க., தலைவர்கள் இணைந்து, கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அடுத்து வரும் தேர்தலை, மற்ற கட்சிகளுடன் இணைந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்திக்கும்.
தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலும், தேர்தலை சந்திக்க உள்ளோம். கடந்த 1998ம் ஆண்டு முதல், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்து வருகிறது.
ஜெயலலிதா காலத்தில் இருந்து, இக்கூட்டணி தேர்தலில் போட்டியிட்டுள்ளது. இது இயல்பான கூட்டணி. ஏற்கனவே லோக்சபா தேர்தலில், ஒருமுறை 39 இடங்களில், 30 தொகுதிகளை இக்கூட்டணி வென்றது.
வரும் தேர்தலில் வெற்றி பெறும் என, முழு நம்பிக்கை உள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெரும்பான்மை இடங்களை பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜ., இணைந்து ஆட்சி அமைக்க உள்ளோம். பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கும். தேர்தலில் வெற்றி பெற்றபின், அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து சொல்வோம். மிகத் தெளிவாகக் கூறுகிறோம்... பழனிசாமி தலைமையில், கூட்டணி அமையும். பா.ஜ., கூட்டணியில் சேர, அ.தி.மு.க., எந்தவிதமான நிபந்தனையும் வைக்கவில்லை.
அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையில் நாங்கள் தலையிடப் போவதில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் பழனிசாமி தலைமையில் அமர்ந்து பேசி திட்டமிடுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க., வருவது, இருவருக்கும் பலனளிக்கக் கூடியது.
பேசுபொருளாக இல்லை
யாருக்கு எத்தனை தொகுதி என்பது குறித்தும் வெற்றி பெற்றபின், ஆட்சியில் இடம்பெறுவது குறித்தும் பின்னர் பேசப்படும். தற்போது, அது பேசுபொருளாக இல்லை. சனாதன தர்மம், மும்மொழிக் கொள்கை, லோக்சபா தொகுதி மறுவரையறை என, தி.மு.க., அரசு பல்வேறு பிரச்னைகளை எழுப்புகிறது.
ஆட்சியின் ஊழல், மோசடி போன்றவற்றில் இருந்து மக்களை திசைதிருப்ப, தி.மு.க.,வினர் இப்பிரச்னைகளை எழுப்புகின்றனர். வரும் தேர்தலில், தி.மு.க., ஆட்சியின் ஊழல், மோசடி, சட்டம்
- ஒழுங்கு பிரச்னை, தலித் மக்கள் மீதான தாக்குதல், பெண்கள் மீதான தாக்குதல் போன்றவை குறித்து பேசப்படும்.
தி.மு.க., ஆட்சியில், 'டாஸ்மாக்' நிறுவனத்தில், 39,000 கோடி ரூபாய்
ஊழல் நடந்துள்ளது. மணல், எரிசக்தி, போக்குவரத்து, ஊட்டச்சத்து, இலவச வேட்டி சேலை, ஊரக வேலை உறுதித் திட்டம் போன்றவற்றில் ஊழல் நடந்துள்ளது. பணப் பரிமாற்றத்தில் ஊழல் நடந்துள்ளது. இதற்கெல்லாம் முதல்வர், துணை முதல்வர், மக்களுக்கு பதில் கூற வேண்டும்.
அதை திசை திருப்பவே, 'நீட்' தேர்வு, தொகுதி மறுவரையறை பிரச்னைகளை, தி.மு.க., எழுப்புகிறது. தேர்தலின்போது, அ.தி.மு.க., - பா.ஜ., இடையே குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்படும். மக்களை சந்திக்கும்போது, உண்மையான பிரச்னைகளை எடுத்துக் கூறுவோம். மக்கள் பிரச்னைகளை தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபட மாட்டோம்.
தமிழகத்தில் பழனிசாமி தலைமையில், இக்கூட்டணி இருக்கும். கூட்டணி மிக உறுதியாக அமைந்துள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை. உறுதியான கூட்டணியாக தேர்தலை சந்திப்போம்.
தமிழ் மக்கள், தமிழ் மொழி, கலாசாரம் போன்றவற்றை, எங்கள் கவுரவமாக கருதுகிறோம். பிரச்னைக்குரிய மாநிலமாக, தமிழகத்தை பா.ஜ., என்றும் கருதியதில்லை. தமிழ் கலாசாரத்தை மதித்து, பார்லிமென்டில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார். தி.மு.க., அதை எதிர்த்தது.
தமிழின் பெருமையை போற்ற, காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தினோம். 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை சேர்த்தோம்.
தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்க்கும் ஒரே நிறுவனம், மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம். அதை உருவாக்கியவர் பிரதமர் மோடி. திருக்குறள், 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. பாரதியார் படைப்புகளை, நுாலாக வெளியிட்டுள்ளோம். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வை, தமிழில் எழுத முடிகிறது. தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது எழுத முடியாத நிலை இருந்தது.
சி.ஆர்.பி.எப்., தேர்வை தமிழில் எழுதும் நிலையை ஏற்படுத்தி உள்ளோம். முன்பு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் எழுதும் நிலை இருந்தது. பொறியியல், மருத்துவப் பாடங்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில், தாய்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழகம் வரும்போதெல்லாம், அந்த பாடங்களை தமிழில் உருவாக்கும்படி கூறுகிறேன். இதுவரை நடக்கவில்லை. தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்திருக்கிறது என்பதை தி.மு.க.,வால் பட்டியலிட முடியுமா?
இன்றும் அண்ணாமலை மாநிலத் தலைவராக அமர்ந்துள்ளார். அதனால், என் அருகில் அமர்ந்துள்ளார். அவரை மாற்றியதால் அ.தி.மு.க., கூட்டணிக்கு முன்வந்தது என்பதில் உண்மை இல்லை. உறுதியான, வலுவான கூட்டணி அமைக்க வேண்டி இருப்பதால், தாமதம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ஜ., சட்டசபை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.