நல்ல நோக்கத்திற்கு எந்த தியாகமும் செய்யலாம் த.வெ.க.,- நா.த.க.,வுக்கு அ.தி.மு.க., அழைப்பு
நல்ல நோக்கத்திற்கு எந்த தியாகமும் செய்யலாம் த.வெ.க.,- நா.த.க.,வுக்கு அ.தி.மு.க., அழைப்பு
ADDED : ஜூலை 25, 2025 03:40 AM
மதுரை: ''தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம்,'' என த.வெ.க., - நா.த.க.,வுக்கு அ.தி.மு.க.,வை சேர்ந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரமாண்ட கட்சி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கையுடன், 'அ.தி.மு.க., கூட்டணியில் பிரமாண்ட கட்சி இணையப் போகிறது' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறினார். ஆனால், 'பா.ஜ., இருக்கும் அணியில் கூட்டணி இல்லை; விஜய், முதல்வர் வேட்பாளர்' என த.வெ.க., கூறிவிட்டது. சீமானும் 'தீமையை தீமையால் அழிக்க முடியுமா' என மறுத்து விட்டார்.
இந்நிலையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான உதயகுமார் கூறியதாவது:
தி.மு.க.,வை அ.தி.மு.க., எதிர்க்கிறது. அதுபோல, த.வெ.க., -நா.த.க., -பா.ம.க., கட்சிகளும் எதிர்க்கின்றன . தி.மு.க., ஆட்சியை எதிர்க்கும் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் தான், நோக்கம் நிறைவேறும். தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவதால், தமிழக மக்கள் விருப்பத்தின் அடிப் படையில், பழனிசாமி அழைப்பு விடுத்தார். நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம்.
தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் ஆகியோர் தி.மு.க.,வுக்கு 20 சதவீதம் ஆதரவு; 80 சதவீதம் எதிர்ப்பு என்ற நிலையில் உள்ளனர்.
ஆவணி பிறந்தால் அன்வர் ராஜா விலகல் அ.தி.மு.க.,வை பாதிக்காது. புலி வேட்டைக்கு செல்லும் நாங்கள், இடையே ஓடும் எலி, அணில் பற்றி எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை.
நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய விசாரணை போன்றவை அ.தி.மு.க.,வுக்கு தடையாக இருக்காது. ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் எல்லாம் சரியாகும். அ.தி.மு.க.,விற்கு நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

