மின்மாற்றி கொள்முதல் முறைகேடு ஐகோர்ட்டில் அ.தி.மு.க., வழக்கு
மின்மாற்றி கொள்முதல் முறைகேடு ஐகோர்ட்டில் அ.தி.மு.க., வழக்கு
ADDED : ஜூலை 25, 2025 11:03 PM
சென்னை:மின்மாற்றி கொள்முதலுக்கு டெண்டர் விட்டதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழு அமைக்கக்கோரி, அ.தி.மு.க., சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2021 - 23ம் ஆண்டுகளுக்கு இடையே, 45,800 'ட்ரான்ஸ்பார்மர்கள்' எனும் மின்மாற்றி கொள்முதல் செய்ய, 1,068 கோடி ரூபாய் மதிப்புக்கு, 'டெண்டர்' கோரப்பட்டது.
'இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும்' எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அ .தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி துணை செயலர் இ.சரவணன், மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர், நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.