கொசு மருந்து அடிப்பவருக்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணி தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க., புகார்
கொசு மருந்து அடிப்பவருக்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணி தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க., புகார்
ADDED : நவ 08, 2025 02:31 AM
சென்னை: துாய்மை பணியாளர்கள், கொசு மருந்து தெளிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர் பணி வழங்கப்பட்டு உள்ளதாக, அ.தி.மு.க., தரப்பில், தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மனு அளித்த பின், அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., இன்பதுரை கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நல்ல நோக்கத்திற்காக செய்யப்படுகிறது. இதன் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும்.
ஆனால், இப்பணியில், தி.மு.க.,வினர் குளறுபடி ஏற்படுத்துகின்றனர். வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு படிவத்தை, தொடர்புடைய ஓட்டுச்சாவடி அலுவலர் தான் வழங்க வேண்டும்.
சில இடங்களில், தி.மு.க., வட்ட செயலர்கள், கவுன்சிலர்களிடம் அவற்றை மொத்தமாக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்கியுள்ளனர். மதுரை வடக்கு தொகுதியில், பெட்டி கடையில் வைத்து படிவத்தை வினியோகித்துள்ளனர். இதன் பின்னணியில், தி.மு.க., உள்ளது.
வீட்டில் குடியிருப்பவர்களிடம் மட்டுமே, கணக்கெடுப்பு படிவத்தை கொடுக்க வேண்டும். வேறு இடத்தில் குடியிருப்பவர்களை தொடர்பு கொண்டு, பழைய இடத்தில் குடியிருப்பதாக ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தி.மு.க.,வினர் கூற சொல்கின்றனர்.
இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று கூறினால், இறப்பு சான்றிதழ் இருக்கிறதா என, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கேட்கின்றனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்களாக துாய்மை பணியாளர்கள், காவலாளிகள், கொசு மருந்து அடிப்பவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அரசு துறை ஊழியர்களை ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமித்தால் மட்டுமே, சரியாக வேலை செய்வர்.
ஒப்பந்த பணியாளர்கள் தவறு செய்யும் போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. சென்னை சேப்பாக்கம் தொகுதியில், மூன்றாம் வகுப்பு படித்த காவலாளியையும், தி.மு.க., பெண் ஓட்டுச்சாவடி ஏஜன்டையும், தேர்தல் அலுவலர்களாக நியமித்துள்ளனர்.
விழுப்புரத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பயிற்சி அளித்துள்ளார்.
இப்படி நடந்தால், வாக்காளர் பட்டியல் எப்படி நம்பகத்தன்மையுடன் இருக்கும்? தேர்தல் அதிகாரிகள், ஆளும் கட்சியினரால் மிரட்டப்படுகின்றனர்.
எனவே, இப்பணியில் ஒப்பந்த பணியாளர்களை தவிர்த்து, ஆசிரியர், வருவாய் அலுவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

