ADDED : நவ 07, 2025 07:29 AM

சென்னை: 'கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல் துறையினர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் கடந்த, 2ம் தேதி இரவு கல்லுாரி மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று பேரை காவல் துறையினர் சுட்டு பிடித்தனர். இதுபற்றி போலீசார் கூறியதற்கும், உண்மையில் நடந்ததற்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவியை, 100 போலீசார் தேடியதாகவும், அதன்பின் மீட்டதாகவும் கோவை போலீஸ் கமிஷனர் கூறினார். உண்மையில் மாணவி, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்று, உதவி கேட்டுள்ளார்.
அவர்கள் மாணவியை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல் துறை முன்னுக்குப் பின் முரணாக பேசியதை, நாளிதழ்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன. எனவே, நடந்தது என்ன என்பதை முதல்வர் தெரிவிப்பாரா? காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

