'இடைச்செருகல் தீர்மானத்தை அ.தி.மு.க., ஆதரிக்கவில்லை'
'இடைச்செருகல் தீர்மானத்தை அ.தி.மு.க., ஆதரிக்கவில்லை'
ADDED : ஜூன் 20, 2026 04:19 AM
சென்னை: 'சட்டசபை நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட, அரசின் தனி தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதல்வர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை, நாங்கள் ஆதரிக்கவில்லை' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சட்டசபையில், அரசின் தனித் தீர்மானத்தின் வழியே, கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட, எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என, மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை ஆதரித்து பேசினேன்.
அடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் தன் உரையில், ஏற்கனவே திருத்தம் அளித்திருப்பதாகக் கூறி, அது தொடர்பான கருத்தை தெரிவித்தார்.
உடனே முதல்வர் எழுந்து, எதிர்க்கட்சி தலைவர் கருத்தை ஏற்பதாக தெரிவித்து, 'நடுவர் மன்றம்' அமைப்பது தொடர்பாக, ஒரு பத்தியை இணைக்கலாம் என்றார்.
பொதுவாக தீர்மானத்திற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, ஓட்டெடுப்பிற்கு விடப்பட்ட பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர் திருத்தத்தை முன்மொழியாமல், ஓட்டெடுப்பிற்கு விட்டு, சபாநாயகர் திருத்தத்துடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அறிவித்தது, சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
இதை நாங்கள் ஆதரிக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
