உச்சத்தில் அ.தி.மு.க., கோஷ்டி பூசல்; தாவலுக்கு தயாரான 'மாஜி' எம்.எல்.ஏ.,
உச்சத்தில் அ.தி.மு.க., கோஷ்டி பூசல்; தாவலுக்கு தயாரான 'மாஜி' எம்.எல்.ஏ.,
ADDED : மார் 18, 2026 04:46 AM

கொல்லிமலை: சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசலால், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன், தி.மு.க.,வுக்கு தாவ உள்ளதாக தகவல் பரவி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், கடந்த, 2016 முதல், 2021 வரை, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சந்திரசேகரன் . அப்போது, இவருக்கும், அ.தி.மு.க., நாமக்கல் மாவட்டச்செயலர் தங்கமணிக்கும் இடையே கருத்து வேறுபாடால், பனிப்போர் நிலவி வந்தது.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் இவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க மாவட்ட செயலர் தங்கமணி மறுத்துவிட்டார். அவருக்கு பதிலாக சந்திரன் என்பவருக்கு, அ.தி.மு.க., சார்பில், 'சீட்' வழங்கப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த சந்திரசேகரன், கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டார்.
இதனால், அ.தி.மு.க., வேட்பாளர் தோல்வி அடைந்தார். இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் சந்திரசேகரன் மீண்டும், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இதனால், நாமக்கல் மாவட்டத்தில் கட்சிக்குள் தங்கமணி அணி மற்றும் சந்திரசேகரன் அணி என, இருகூறாக அ.தி.மு.க., செயல்படத் துவங்கியது.
இருந்தபோதும், வரும் சட்டசபைத் தேர்தலுக்காக, சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட விரும்பி, தொகுதிமக்களுக்கு நிறைய பரிசு பொருட்களை வழங்கினார் சந்திரசேகரன்.
இந்நிலையில் மீண்டும் சீட் கேட்டு, பொதுச்செயலர் பழனிசாமியை அவர் அணுக, ''மாவட்டச் செயலர் தங்கமணியை சந்தியுங்கள்; அவர் முடிவு செய்வார்' என கூறியுள்ளார். இதற்கிடையே, கடந்த முறை போட்டியிட்ட சந்திரன் தான் மீண்டும் வேட்பாளர் என, தகவல் கசியவிடப்பட, சந்திரசேகரன் அப்செட் ஆனார்.
இதனால், 'இனி அ.தி.மு.க., சரிபட்டு வராது' என முடிவெடுத்தவர், தி.மு.க.,வில் இணைய முடிவெடுத்து விட்டார்.

