மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விசாரணை அதிகாரிகளை மாற்ற வேண்டும் அ.தி.மு.க., வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விசாரணை அதிகாரிகளை மாற்ற வேண்டும் அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : ஆக 12, 2025 05:38 AM

மதுரை : 'மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ. பல கோடி சொத்துவரி முறைகேடு புகாரை விசாரிக்கும் போலீஸ் உதவி கமிஷனர் வினோதினி, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமியை மாற்ற வேண்டும்' என விசாரணை அதிகாரியான டி.ஐ.ஜி., அபினவ் குமாரிடம் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் வழக்கறிஞர்கள், கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
பின் செல்லுார் ராஜூ கூறியதாவது:
இம்முறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததே அ.தி.மு.க.,. மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா பல முறை கேள்வி எழுப்பியதால் அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார் நடவடிக்கையை முடுக்கி விட்டார். தற்போதைய கமிஷனர் சித்ராவையும் தொடர்ந்து வலியுறுத்தினோம்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் டி.ஐ.ஜி., தலைமையில் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இம்முறைகேட்டில் மேயரையும் விசாரிக்க கோரி அ.தி.மு.க., போராட்டம் நடத்தியது. வழக்கின் வேகத்தை குறைக்கும் வகையில் கைதான வரி விதிப்புக்குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணனின் வாக்குமூலத்தில், சோலைராஜாவையும் சொத்துவரி ஏய்ப்புக்கு துணைபோனதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது ஆளுங்கட்சியின் திட்டமிட்ட சதி. முறைகேட்டை யார் வெளியே கொண்டு வந்தார்களோ, அவர்கள் மீதே பழி சுமத்தும் வகையில் இந்த வழக்கை அதிகாரிகள் திசை திருப்புவதாக உள்ளது. போலீசார் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்றார்.
நீதிமன்றத்தில் முறையிடுவோம் அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் தமிழ்செல்வன் கூறியதாவது:
ரூ.200 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடர்ந்து சி.பி.ஐ., விசாரணை கோரினோம். டி.ஐ.ஜி., தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் முன்பு விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தான் இடம் பெற்றுள்ளனர்.
மேயர், மண்டல தலைவர் உள்ளிட்ட தி.மு.க.,வினரை அந்த அதிகாரிகள் காப்பாற்றும் மனநிலையில் உள்ளனர்.
அவர்களை மாற்றினால் தான் நியாயமான விசாரணை நடக்கும். இதுகுறித்து உயர்நீதிமன்றத்திலும் முறையிட உள்ளோம் என்றார்.