பயிர் பாதிப்புக்கு முழு நிவாரணம் வழங்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
பயிர் பாதிப்புக்கு முழு நிவாரணம் வழங்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : டிச 01, 2024 11:51 PM

சென்னை: 'புயலின் போது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த ஒரு வாரமாக பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பெய்த கனமழை காரணமாக, டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், மழை நீர் மற்றும் வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்துள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு, தி.மு.க., அரசு பயிர் காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள், 1 ஹெக்டேருக்கு பயிர் காப்பீட்டு தொகையாக வழங்கும் 84,000 ரூபாய் கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகளாக, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, நிவாரணமாக 1 ஏக்கருக்கு 34,000 ரூபாய் அரசு வழங்க வலியுறுத்தினேன். அதையும் அரசு செய்யவில்லை.
தற்போது புயல் மழையில், விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டிருந்த பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அரசு கடந்த ஆண்டுகளை போல், ஒரு சில இடங்களில் ஆய்வு செய்துள்ளது; பெரும்பாலான இடங்களில் ஆய்வு செய்யாமல் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரண தொகையையும் வழங்க வேண்டும். தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தி, உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், வெள்ள பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை நேரில் சென்று வழங்க வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.
நடவடிக்கை எடுக்கணும்
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே, வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நேற்று அதிகாலை நடைபயிற்சி சென்றுள்ளார்; கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பல்லடத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட ஈரம் காய்வதற்குள், அதே மாவட்டத்தில் அடுத்த கொலை நடந்திருப்பது கவலை அளிக்கிறது.
தி.மு.க., ஆட்சியில் எங்கும்; யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. சட்டம் - ஒழுங்கை முழுதும் சீர்குலைத்து, மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள தி.மு.க., அரசுக்கு கண்டனம். சட்டம் - ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும்.
பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,