அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் ஆணையம் விரைந்து விசாரிக்க மனு
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் ஆணையம் விரைந்து விசாரிக்க மனு
ADDED : பிப் 18, 2025 08:21 PM
'இரட்டை இலைச் சின்னம் தொடர்பான பிரச்னை குறித்து, விரைந்து விசாரணை நடத்த வேண்டும்' என, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார் அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி.
அ.தி.மு.க.,வின் உட்கட்சி மற்றும் தேர்தல் சின்ன விவகாரம் குறித்து, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டது நீதிமன்றம்.
'சின்னங்கள் ஒதுக்கீடு சட்டத்தின்படி, அ.தி.மு.க., சின்னம் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்' என்று உயர் நீதிமன்றம் கூறி உத்தரவிட்டதை அடுத்து, இது தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையம் விரைந்து விசாரிக்க உள்ளது.
இந்நிலையில், நேற்று டில்லியில், அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி புகழேந்தி தரப்பில், தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை ஐகோர்ட், கடந்த 12ல், ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தேர்தல் ஆணையத்திற்கு என இருக்கும், சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் திருத்தப்பட்ட சட்டத்தின் பாரா எண் 15ல் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில், அ.தி.மு.க.,வுக்கு, சின்னம் ஒதுக்கீடு செய்வதில், ஏதேனும் பிரச்னை இருந்தால், அது குறித்து விரைந்து விசாரிக்க வேண்டும். பின், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஜனவரி 9ல், பிறப்பித்திருந்த தடை உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளதால், விரைந்து விசாரிப்பதற்கு, தேர்தல் ஆணையத்துக்கு எவ்வித தடையும் இல்லை.
இதுமட்டுமல்லாது, கடந்த 12ல் வெளியான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து, ராஜ்யசபா எம்.பி.,யும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் ஆதரவாளருமான சி.வி.சண்முகம், ' அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தலையிடுவதற்கு, எந்தவிதமான உரிமையும் கிடையாது. ஒரு கிளார்க் என்ன பணி செய்ய முடியுமோ, அதை மட்டுமே, தலைமை தேர்தல் ஆணையம் செய்ய முடியும். அதாவது, குமாஸ்தா வேலையைத்தான் செய்ய முடியும்' என கூறியுள்ளார். எனவே, சி.வி.சண்முகம் விமர்சனம் குறித்தும் தேர்தல் ஆணையம் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
-நமது டில்லி நிருபர்-