அ.தி.மு.க., வலுவிழந்து உள்ளது திருமாவளவன் அதிரடி பேட்டி
அ.தி.மு.க., வலுவிழந்து உள்ளது திருமாவளவன் அதிரடி பேட்டி
ADDED : ஜன 30, 2025 07:33 PM
சென்னை:''ஈரோடு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடாதது, அக்கட்சி வலுவிழந்து இருப்பதையே காட்டுகிறது,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதியில், அ.தி.மு.க., போட்டியிடவில்லை என்பது, அரசியல் ரீதியாக அக்கட்சி வலுவிழந்து உள்ளதையே காட்டுகிறது. சென்னை ஈ.சி.ஆர்., பகுதியில் இளம் பெண்கள் வந்த காரை, தி.மு.க.,வின் கட்சி கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள், கும்பலாக துரத்திய சம்பவத்தில், காரில் கட்சி கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே, அவர்கள் தி.மு.க.,வினர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. மாற்றுக் கட்சியினரும் கூட தி.மு.க., கொடி கட்டி சென்றிருக்கக் கூடுமே. அது குறித்தும், தீவிரமாக விசாரிக்க வேண்டும். எனினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை.
அ.தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே உறவு இருக்கிறது என தொடர்ந்து நான் சொல்லி வருகிறேன். வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு, இரு கட்சிகள் இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.,வின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கூட கண்டிக்க மறுத்து, பா.ஜ., விஷத்தில் தொடர்ந்து மென்மையான போக்கை அ.தி.மு.க., கையாண்டு வருகிறது. இதையெல்லாம் வைத்துத்தான், இரு கட்சிகளுக்கும் இடையே உறவு இருக்கிறது என சொல்கிறேன்.
வேங்கைவயலில், தேவையில்லாமல் போலீஸ் கெடுபிடி காட்டுகிறது. அங்கு மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். இறுதி சடங்குக்குச் செல்லும் உறவினர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டி உள்ளனர். வேங்கைவயல், போலீஸ் கெடுபிடியால் தனித்தீவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி மக்கள் எளிதில் கிராமத்துக்குள் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும். போலீஸ் கெடுபிடி குறைந்தாலே, இயல்பு நிலை திரும்பி விடும்.
தன்னை நோக்கி மக்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்காக, சீமான் ஏதோ பேசுகிறார். ஈ.வெ.ராமசாமியை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. அவருடனான மோதலை சீமான் கைவிட வேண்டும். வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா, அரசமைப்புக்கு எதிரானது. பா.ஜ., அரசு எதிர்ப்புகளை மீறி, மசோதாவை தாக்கல் செய்வது கண்டனத்துக்கு உரியது.
வி.சி.,கவில் துணை பொதுச்செயலராக இருந்த ஆதவ் அர்ஜுனா, த.வெ.க.,வில் இணைந்து இயங்கப் போகிறார் என்ற செய்தி வருகிறது. அது நடந்தால், மகிழ்ச்சிதான். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். அவர் எங்களுடன் இருந்த காலக்கட்டங்களில், மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட்டார். எல்லோருடனும் இணக்கமாக இருந்தார். கட்சி தலைமை மீதும், கட்சி மீதும் விசுவாசத்தோடு செயல்பட்டார். கூட்டணி தொடர்பான மாறுப்பட்ட கருத்துக்களால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதானது. அதனால், அவர் கட்சியில் இருந்து விலகியது எதிர்பாராத நிகழ்வு. எங்களோடு தொடர்ந்து இயங்காதது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

