அமித்ஷா அளித்த பேட்டியால் அ.தி.மு.க., மேலிடம் அதிருப்தி: இப்போதைக்கு அமைதி காக்க பழனிசாமி முடிவு
அமித்ஷா அளித்த பேட்டியால் அ.தி.மு.க., மேலிடம் அதிருப்தி: இப்போதைக்கு அமைதி காக்க பழனிசாமி முடிவு
UPDATED : ஜூன் 28, 2025 01:18 AM
ADDED : ஜூன் 28, 2025 12:20 AM

சென்னை:கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியால், அ.தி.மு.க., தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. அதற்கு உடனடியாக பதிலோ, எதிர்ப்போ தெரிவித்து, கூட்டணியில் பிரச்னை ஏற்படுவதை விரும்பாத பழனிசாமி, இப்போதைக்கு அமைதி காக்க முடிவு செய்துள்ளார்.
கடந்த 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 2023 செப்டம்பரில் பா.ஜ., கூட்டணியை அ.தி.மு.க., முறித்தது.
இதன்பின், 2024 லோக்சபா தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தோல்வி அடைந்தன. அதனால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன், கடந்த ஏப்ரல் 11ல் மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவானது.
அதற்கு வசதியாக, தமிழக பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். 'கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்' என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும் கூறி வருகின்றனர்.
கடந்த 22ம் தேதி, மதுரையில் ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
'முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது என்று நம்பி சென்றோம். ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சிப்பதை பொறுக்க மாட்டோம்' என அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அமித் ஷா நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதில், பா.ஜ.,வும் ஒரு அங்கமாக கண்டிப்பாக இருக்கும். முதல்வர், அ.தி.மு.க.,வில் இருந்து வருவார்' என்று கூறியுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை, முதல் பொதுத் தேர்தலில் இருந்தே கூட்டணி ஆட்சி அமையவில்லை. கூட்டணி அமைத்து வென்றாலும், தி.மு.க., - அ.தி.மு.க., தனியாக ஆட்சி அமைக்கின்றன. எனவே, கூட்டணி ஆட்சி என்ற வாதத்தையே அ.தி.மு.க., எப்போதும் ஏற்றதில்லை.
அதுபோல, முதல்வராக பழனிசாமி வருவார் என்று கூறாமல், 'அ.தி.மு.க.,வில் இருந்து வருவார்' என அமித் ஷா கூறியுள்ளார்.
கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் குறித்த அமித் ஷாவின் பேட்டி தான், அ.தி.மு.க.,வுக்குள் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமித் ஷாவின் கருத்து, அ.தி.மு.க.,வினரிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
'பிரதமர் பா.ஜ.,விலிருந்து வருவார்' என பழனிசாமி கூறினால், பா.ஜ.,வினருக்கு எப்படி இருக்கும்? 'டில்லிக்கு மோடி, தமிழகத்திற்கு பழனிசாமி' என அ.தி.மு.க.,வினர் தெளிவாக பேசி வரும் போது, அமித் ஷா, தெளிந்த குட்டையில் கல்லெறிவது ஏன் என்பது தெரியவில்லை.
கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும். அது பற்றி இப்போது பேசுவது தேவையற்றது. ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்து வெறும் வாயில் மெல்பவர்களுக்கு, முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி, ஹிந்து முன்னணி அவல் கொடுத்தது. இப்போது, அமித் ஷாவும் அவல் கொடுத்திருக்கிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தான் அனைத்தையும் தீர்மானிக்கும். இதை, பொதுவெளியில் பேசி விவாதமாக்க விரும்பவில்லை.
அமித் ஷா பேச்சுக்கு பதில், எதிர்ப்பு என எதையாவது பேச மாட்டோமா என்று தி.மு.க., எதிர்பார்க்கிறது. அதற்கு இடம் தந்து, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே, இப்போதைக்கு அமைதி காப்பதே நல்லது என்ற முடிவை எடுத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.