'நீட்' தேர்வு அச்சத்தால் தற்கொலை 19ல் அ.தி.மு.க., அஞ்சலி
'நீட்' தேர்வு அச்சத்தால் தற்கொலை 19ல் அ.தி.மு.க., அஞ்சலி
ADDED : ஏப் 11, 2025 12:25 AM
சென்னை:'நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்து கொண்டவர்களுக்கு, வரும் 19ம் தேதி, அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில், மாவட்டத் தலைநகரங்களில், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 2021 சட்டசபை தேரதலின்போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்ய, முதல் கையெழுத்திடுவோம்' என, முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றனர். கடந்த ஜனவரி 10ம் தேதி, சட்டசபையில் நீட் தேர்வு குறித்து பேசிய முதல்வர், 'நீட் நுழைவுத் தேர்வை, மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும். மாநில அரசுக்கு அந்த உரிமை இல்லை' என்றார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நடத்தப்பட்ட நாடகத்தின் முதல்கட்டமாக, சட்டசபையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாம் கட்டமாக, தி.மு.க., கூட்டணிக் கட்சியினர், 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றதாகக் கூறி, சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டில், காட்சிக்கு வைத்தனர். பின், அதை குப்பையில் வீசுவது போல வீசிச் சென்றனர்.
'நீட்' நுழைவுத் தேர்வு ரத்து நாடகத்தின் மூன்றாம் கட்டமாக, கடந்த 9ம் தேதி சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் என்ற நாடகத்தை நடத்தினர். அதில் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, இதுவரை நீட் தேர்வு அச்சத்தால், 22 மாணவ, மாணவியர், தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு, அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில், வரும் 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

