ADDED : ஆக 06, 2025 08:44 AM
மதுரை, : கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கில் அ.தி.மு.க.,தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப்பில் அ.தி.மு.க.,கொடிக் கம்பம் நட அனுமதிக்க உத்தரவிடக்கோரி, அதன் நிர்வாகி கதிரவன் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், அரசின் பிற துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். அதனால், மனுவை ஏற்க முடியாது; தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.
'மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்,' என அதன் மாநில செயலர் சண்முகம் மனு தாக்கல் செய்தார்.
மார்க்சிஸ்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி சி.சரவணன் விசாரித்து, தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சண்முகம் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஜூலை 22ல், கொடி கம்பம் தொடர்பான வழக்குகளை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, 'விருப்பமுள்ள கட்சிகள் விளக்கமளிக்கும் வகையில், இவ்வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள இடையீட்டு மனுக்களை ஆக.5 க்குள் தாக்கல் செய்யலாம்.
கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும்,' என உத்தரவிட்டு, வழக்கை ஆக. 6க்கு ஒத்தி வைத்தனர்.
இதையடுத்து, அ.தி.மு.க.,சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், 'இவ்வழக்கில் எங்கள் கட்சியையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் தரப்பு நிலைப்பாட்டை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும்,' என கூறியுள்ளார்.