அ.தி.மு.க.,வினருக்கு பா.ஜ., தலைவர் நாகேந்திரன் வீட்டில்... விருந்து! இரு தரப்பையும் இணைத்து ஒருமிக்க பா.ஜ., மேலிடம் கட்டளை
அ.தி.மு.க.,வினருக்கு பா.ஜ., தலைவர் நாகேந்திரன் வீட்டில்... விருந்து! இரு தரப்பையும் இணைத்து ஒருமிக்க பா.ஜ., மேலிடம் கட்டளை
UPDATED : ஜூலை 20, 2025 12:44 AM
ADDED : ஜூலை 20, 2025 12:41 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு,
திருநெல்வேலியில் உள்ள தன் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்,தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன். பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, பா.ஜ., தலைமை உத்தரவிட்டதை அடுத்து, இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., திடீரென விலகியது. பா.ஜ., இல்லாத வலுவான கூட்டணியை உருவாக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முயற்சி மேற்கொண்டும் பலனில்லை. பெரிய கட்சிகள் எதுவும் அ.தி.மு.க.,வை நோக்கி வரவில்லை. தே.மு.தி.க., மற்றும் எஸ்.டி.பி.ஐ., என, இரு கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இடம் பெற்றன.
ஏமாற்றம்
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதால், சிறுபான்மையினர் ஓட்டுகள் தங்கள் கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த பழனிசாமி ஏமாற்றம் அடைந்தார். லோக்சபா தேர்தலில் பின்தங்கிய அ.தி.மு.க., கூட்டணிக்கு, 20.4 சதவீத ஓட்டுகளே கிடைத்தன.அதேநேரத்தில், பா.ஜ., 18 சதவீத ஓட்டுகளை பெற்றது. அதனால், மீண்டும் பா.ஜ., பக்கம் தன் பார்வையை திருப்பினார் பழனிசாமி.கடந்த ஏப்ரல் 4ல் தமிழக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பழனிசாமியுடன் சிலர் வாயிலாக பேச்சு நடத்தினார். இதையடுத்து, அன்றைய தினமே இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் கூட்டணி மலர்ந்தது.
அப்போது, 'வரும் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்' என்று தெரிவித்த அமித்ஷா, 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்; அதில், பா.ஜ., அங்கம் வகிக்கும்' என்றும் தெளிவாக கூறிச்சென்றார்.
ஆனால், 'தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி தான் அமையும். அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்' என, பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., தலைவர்கள் கூறி வந்தனர்.
அதே நேரம், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும்; அதில், பா.ஜ., அங்கம் வகிக்கும்' என, தமிழக பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே நெருடல் உருவானது. கூட்டணியில் முரண்பாடுகளும் அதிகரித்தன.
'இனியும் தொடர்ந்து பொறுமையாக இருப்பது சரியல்ல' என்று முடிவெடுத்த அ.தி.மு.க., தரப்பு, முக்கிய தலைவர்கள் வாயிலாக அமித்ஷாவிடம் இது குறித்து பேசியது. இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரனை தொடர்பு கொண்ட மத்திய பா.ஜ., தலைவர்கள், 'கூட்டணியில் இரு கட்சியினர் இடையே இருக்கும் நெருடலை போக்குங்கள்; அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்' என்று உத்தரவிட்டனர்.
கூடவே, 'இந்த விஷயத்தில் நெருடலான பேச்சு கூடாது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் குட்டு வைத்தனர்.இதன் தொடர்ச்சியாக, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொள்ளும் பழனிசாமியை, தன் வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைக்க முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார், தமிழக பா.ஜ., தலைவர்நாகேந்திரன்.
700 பேர் பங்கேற்பு
அடுத்த மாதம், 2ம் தேதி, திருச்செந்துார், ராதாபுரம், வள்ளியூர் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார் பழனிசாமி; அன்றைய தினம் இரவு திருநெல்வேலியில் தங்குகிறார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்றும் திருநெல்வேலியில் இருக்கும் அவருக்கு, நாகேந்திரன் வீட்டில் இரவு விருந்து அளிக்கப்படுகிறது. விருந்தில், அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்கள் 700 பேர் வரை கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., தரப்பிலும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். விருந்துக்கு முன், இரு கட்சியினரும் கலந்தாலோசனை கூட்டத்திலும் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, 8ம் தேதி வரை, தென் மாவட்டங்களில் பிரசார பயணம் மேற்கொள்ளும் பழனிசாமியோடு, நாகேந்திரனும் பங்கேற்க உள்ளார்.
- நமது நிருபர் -