ADDED : ஏப் 09, 2025 01:56 AM
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுந்து, சட்டசபை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படுவது குறித்து, கேள்வி எழுப்ப முயன்றார்.
அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து, பா.ம.க., -- ஜி.கே.மணியை பேச அழைத்தார். இதனால், அதிருப்தி அடைந்த பழனிசாமி, சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து, பழனிசாமி பேச அனுமதிக்கும்படி கோஷம் போட்டனர். அப்போது, அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ''எதிர்க்கட்சி தலைவர் பேச முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்போம்,'' என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய பழனிசாமி, ''கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது, நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை,'' என்று குற்றம்சாட்டினார்.
அதற்கு சபாநாயகர் விளக்கம் அளித்தார். அதை ஏற்க மறுத்து பழனிசாமி பேசியது, சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.