தமிழக பெண்களுக்கு பாதுகாப்பில்லை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழக பெண்களுக்கு பாதுகாப்பில்லை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
ADDED : நவ 12, 2025 07:07 AM

சென்னை: 'பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 14ம் தேதி திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் தலைமையிலான, தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் நடமாட்டம், கடத்தல், போதையில் இளைஞர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது.
பெண்களை பாதுகாக்கும் மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தை, பெண்கள் பொது வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவுக்கு, தி.மு.க., ஆட்சியில் சட்டம் -- ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
கோவையில் கல்லுாரி மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை, திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம், போலீஸ்காரர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்தது என, தமிழக வரலாற்றில், தி.மு.க., ஆட்சி காலம் ஒரு கரும்புள்ளி என்பதை, இது போன்ற நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன.
வரிகளை உயர்த்தி, மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது.
இதற்கு காரணமான தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 14ம் தேதி, காலை 10:00 மணிக்கு, திண்டிவனம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

