வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை பார்வையிட சிறப்பு குழு நியமிக்கவும்: பா.ஜ.,
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை பார்வையிட சிறப்பு குழு நியமிக்கவும்: பா.ஜ.,
ADDED : நவ 12, 2025 07:10 AM

சென்னை: 'தமிழகத்தில் நடந்து வரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை பார்வையிட, தமிழக தேர்தல் கமிஷன், சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
போலி வாக்காளர்களை கண்டறியும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் தி.மு.க., அரசு, தமிழகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி, அந்த பணிகளை முடக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல மாநில மக்கள் வசித்து வரும், சென்னை, கோவை, போன்ற பெரு நகரங்களில், தமிழில் மட்டுமே, வாக்காளர் படிவங்கள் வழங்கப்படுவதாகவும், 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள சென்னையில், படிவங்கள் பற்றாக்குறையால், இதுவரை, 6.40 லட்சம் படிவங்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும், குற்றச் சாட்டுகள் எழுகின்றன.
எனவே, இந்த விஷயத்தில், உடனே தமிழக தேர்தல் கமிஷன் தலையிட்டு, தமிழகத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை பார்வையிட, சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். அரசு அதிகாரிகளையும், நடுநிலையானவர்களையும் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளாக பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

