ADDED : டிச 28, 2024 07:41 PM
சென்னை:தி.மு.க., அரசை கண்டித்து, வரும் ஜனவரி 3ல் தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், அக்கட்சியின் அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டுச் சென்றாலும், தவறு செய்யும் தி.மு.க.,வினருக்கு ஆதரவாகவே, அரசு செயல்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்ம், பேராவூரணி பேரூராட்சி தி.மு.க.,வைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிரறது. ஒப்பந்த பணிகள் மேற்கொள்வதில் அரசு விதிமுறைகள் மீறப்படுவதோடு, ஒப்பந்த பணிகளை செய்யாமலேயே, அதிகாரிகள் துணையுடன் முறைகேடுகள் நடந்துள்ளன.
இது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்க விடாமல், துறையின் அமைச்சர் தடுப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதை கண்டித்து, தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், வரும் ஜனவரி 3ம் தேதி காலை 10:00 மணிக்கு பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்பபாட்டம் நடக்கும். இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ், மாவட்ட செயலர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

