காரைக்குடி மேயரை நீக்கக்கோரி 15ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
காரைக்குடி மேயரை நீக்கக்கோரி 15ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
UPDATED : ஜூலை 13, 2025 03:24 AM
ADDED : ஜூலை 13, 2025 02:09 AM

சென்னை: 'காரைக்குடி மாநகராட்சி மேயரை பதவி நீக்கம் செய்யக்கோரி, நாளை மறுதினம், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க.,வைச் சேர்ந்த காரைக்குடி மாநகராட்சி மேயர், மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல், முன் அனுமதி வாயிலாக, தனக்கு வேண்டியவர்களுக்கு ஆதாய நோக்கத்துடன் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை வழங்கி உள்ளதாகவும், முறைகேடு நடந்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களை பேச விடாமல் மிரட்டுவதோடு, பெண் கவுன்சிலர்களையும், அதிகாரிகளையும் தரக்குறைவாகப் பேசியும், மிரட்டியும் வருவதாக புகார்கள் வந்துள்ளன. மாநகராட்சி இடங்களுக்கு குறைவான வாடகை நிர்ணயம் செய்து, பல ஆண்டுகளுக்கு தனியார் முதலாளிகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதிய அடுக்குமாடி வீடுகளுக்கும், தனி வீடுகளுக்கும் வரி விதிப்பு செய்வதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, மக்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர். இதை வேடிக்கை பார்க்கும் தி.மு.க., அரசைக் கண்டித்தும், காரைக்குடி மேயரை பதவிநீக்க வலியுறுத்தியும், மாநகராட்சி அலுவலகம் அருகில் அ.தி.மு.க., சார்பில், நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் நடக்கும். அதில் அமைப்புச் செயலர் சீனிவாசன், சிவகங்கை மாவட்டச் செயலர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

