அமைச்சரை கண்டித்து அ.தி.மு.க., மகளிர் இன்று ஆர்ப்பாட்டம்
அமைச்சரை கண்டித்து அ.தி.மு.க., மகளிர் இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 10, 2025 07:30 PM
சென்னை:'அமைச்சர் சிவசங்கரை கண்டித்து, அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
அண்ணா பல்கலை வளாகத்திலேயே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள, 'சார்' என்ற, அந்த ஒரு நபர் யார் என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அதற்கு முறையான பதில் அளிக்காமல் முதல்வரும், அமைச்சர்களும் பதற்றமடைந்து, எதிர்க்கட்சிகளை வசைபாடுவதன் வாயிலாக, யாரோ ஒருவரை காப்பாற்ற முயற்சிக்கிறார்களோ என்கிற ஐயம் எழுந்துள்ளது.
அமைச்சர் சிவசங்கர், அ.தி.மு.க., மீது அவதுாறு செய்திகளை பரப்பி, மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை திசை திருப்பப் பார்க்கிறார். 'பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அ.தி.மு.க.,' என அநாகரிகமான, அருவருக்கத்தக்க, அப்பட்டமான பச்சை பொய்யை கூறியுள்ள சிவசங்கரை கண்டித்து, சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.