அமைச்சர் பொன்முடியை நீக்க வலியுறுத்தி அ.தி.மு.க., மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
அமைச்சர் பொன்முடியை நீக்க வலியுறுத்தி அ.தி.மு.க., மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 16, 2025 08:56 PM

சென்னை:பெண்களை இழிவுப்படுத்தும் வகையில், ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை, சைதாப்பேட்டை கருணாநிதி நினைவு வளைவு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமை வகித்தார். அமைச்சர் பொன்முடி பதவி விலகக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மகளிரணியினர், செருப்பை காட்டி கோஷங்கள் எழுப்பினர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியதாவது:
பெண்கள் குறித்து, சைவம், வைணவம் என, ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை, தி.மு.க., நலன் கருதி, கட்சி பதவியில் இருந்து நீக்கி விட்டனர். அதேபோல், பெண்கள் மற்றும் தாய்மார்களின் நலன் கருதி, அவரை அசைச்சர் பதிவியில் இருந்து நீக்கி, கைது செய்ய வேண்டும். சாதாரணமாக, பேச்சாளர்கள் பொது வெளியில் அருவருக்கத்தக்க வகையில் பேசினால், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால், பொன்முடி விஷயத்தில், காவல் துறையினர் அமைதியாக இருப்பதற்கு, அவரது பதவியே காரணம். அவரை இன்னும் அமைச்சரவையில் வைத்திருப்பது சாபக்கேடு. பொன்முடியை நீக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவது குறித்து, பொதுச்செயலர் பழனிசாமியிடம் கேட்டுள்ளோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில், தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.