ஸ்டாலினின் பொய்க்காக நோபல் பரிசு தரலாம் அ.தி.மு.க., பழனிசாமி கிண்டல்
ஸ்டாலினின் பொய்க்காக நோபல் பரிசு தரலாம் அ.தி.மு.க., பழனிசாமி கிண்டல்
ADDED : ஜூலை 12, 2025 03:14 AM

வானுார்: ''பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்,'' என வானுார் தொகுதியில் நடந்த பிரசாரத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
வானுார் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில், அ.தி.மு.க., சார்பில் 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசாரம் நடந்தது.
விதிகள் தளர்வு
இதில் பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சொல்லி, ஆட்சிக்கு வந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் நிறைவேற்றப்படவில்லை.
அ.தி.மு.க., அழுத்தத்தால் உரிமை தொகை வந்தது. தேர்தல் வர உள்ளதால், 30 லட்சம் பேருக்கு வழங்க விதிகளை தளர்த்தி உள்ளனர். அதையும் 8 மாதம் மட்டுமே வழங்க உள்ளனர். ஆக, 52 மாதம் பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு பிறகு தகுதி அடிப்படையில் என கூறி அதையும் நிறுத்திவிடுவர். இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டாலும், தி.மு.க.,வில் மட்டும் தொடர்கிறது.
விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெ., பல்கலையை, ஸ்டாலின் ரத்து செய்து விட்டார்.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அ.தி.மு.க., ஆட்சியில் கொடுக்கப்பட்டதால் 2,818 மாணவர்கள் மருத்துவம் படித்துள்ளனர்.
அஞ்சாத கட்சி
பா.ஜ.,வுடன் உறவில் இருந்தாலும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம், 162ஐ பின்பற்றி 7.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றினோம்.
பா.ஜ.,வுக்கு, அ.தி.மு.க., அடிமையாகி விட்டது என்கிறார் ஸ்டாலின். அமலாக்கத்துறை சோதனைக்கு யார் அஞ்சி நடுங்குகின்றனர் என்பது ஊருக்கே தெரியும்.
அ.தி.மு.க., எதற்காகவும் அஞ்சாத கட்சி. தற்போது அமைச்சர்களாக இருந்து கொண்டு கொள்ளை மேல் கொள்ளை அடித்துக் கொண்டிருப்போரெல்லாம், தேர்தல் நெருக்கத்தில் ஜெயிலுக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது.
திண்டாட்டம்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என மக்கள் அனைவரும் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 'ஓரணியில் தமிழகம்' என, மக்களை ஓரணியில் திரட்ட முயற்சிக்கிறார் முதல்வர்.
மக்கள் ஓரணியில் திரண்டு, உங்களை ஆட்சியை விட்டு விரட்டப் போகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தனி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
மக்களை மடை மாற்றம் செய்ய, ஸ்டாலின் தந்திரமாக பேசி வருகிறார். பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.