பிரசார கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் டென்ஷனான அ.தி.மு.க., பழனிசாமி
பிரசார கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் டென்ஷனான அ.தி.மு.க., பழனிசாமி
UPDATED : ஆக 20, 2025 10:36 AM
ADDED : ஆக 20, 2025 02:52 AM
அணைக்கட்டு:அணைக்கட்டில் நடந்த அ.தி.மு.க., பிரசார கூட்டத்தின் நடுவே, நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் சென்றதால், பழனிசாமி டென்ஷன் ஆனார்.
தமிழகம் முழுதும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. நேற்று முன்தினம் இரவு வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பகுதிக்கு சென்ற அவர், கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் துவங்கினார். அப்போது, கூட்டத்தின் நடுவே ஒரு ஆம்புலன்ஸ் சென்றது. 'அதற்கு வழிவிடுங்கள்' என கட்சித் தொண்டர்கள் மற்றும் கூடியிருந்த பொதுமக்களிடம் மைக் மூலம் கேட்டுக் கொண்டார் பழனிசாமி.
அப்போது தொண்டர்கள், 'ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இல்லை தலைவரே' என, குரல் கொடுத்தனர். உடனே டென்ஷனான பழனிசாமி, 'அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் யாரென பாருங்கள்; அவரை அப்படியே பிடித்து, போலீசிடம் ஒப்படைத்து புகார் அளியுங்கள்' என, கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க., நடத்தும் கூட்டங்களுக்கு நடுவே, நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி, குழப்பம் ஏற்படுத்துகின்றனர். கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பதன் வாயிலாக, மக்கள் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு வர மாட்டார்கள் என்ற கெட்ட எண்ணத்துடன், தி.மு.க.,வினர், திட்டமிட்டு நாம் நடத்தும் கூட்டங்களுக்கு நடுவே, வெற்று ஆம்புலன்சை அனுப்புகின்றனர்.
இதுவரை, 20க்கும் மேற்பட்ட கூட்டங்களுக்கு இப்படி ஆம்புலன்ஸ் அனுப்பி உள்ளனர். இதுதான், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? கூட்டத்தின் நடுவே, வாகனம் செல்வதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி செய்யும்போது, பொதுமக்கள் பாதிப்படைவர் என்பதை நன்கு அறிந்தே இப்படி செய்கின்றனர்.
இதுபோன்று அடுத்து வரும் கூட்டங்களுக்கும், நோயாளிகள் இல்லாமல் ஆம்புலன்சை கூட்டத்தின் குறுக்கே விட்டால், அதன் டிரைவர் பேஷன்ட்டாக மாற்றப்பட்டு, அதே ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எல்லாரையும் துன்புறுத்தும் அரசாக, தி.மு.க., அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.