'த.வெ.க., வந்தால் சிறப்பு; இல்லையேல் சிரமம்' விஜயை கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., வியூகம்
'த.வெ.க., வந்தால் சிறப்பு; இல்லையேல் சிரமம்' விஜயை கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., வியூகம்
ADDED : ஆக 14, 2025 07:07 AM
சென்னை : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க., சேர்ந்தால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. எனவே, விஜய் உறவினர்கள், நண்பர்கள் வாயிலாக, கூட்டணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதில் சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை.
எனவே, விஜய் கட்சியினர் வாயிலாகவே, அவருக்கு அழுத்தம் தரப்பட்டு, கூட்டணிக்கு இழுக்க அ.தி.மு.க., வியூகம் வகுத்துள்ளது. முதல் கட்டமாக, கொங்கு மண்டலத்தில் பலமான 'மாஜி' அமைச்சர் ஒருவரின் உறவினர், கொங்கு பகுதி த.வெ.க., நிர்வாகிகளை சமீபத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, அந்த பிரமுகர் கூறியுள்ளதாவது:
ஆளுங்கட்சி, பண பலம், அதிகார பலத்துடன் தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. அப்படி இருந்தும் தொண்டர்கள் சோர்வடைய கூடாது என்பதற்காக தொகுதி, மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி, பரிசு பொருட்கள், பணத்தை வாரி இறைக்கிறது.
அ.தி.மு.க., - தி.மு.க.,வில் ஒரு வார்டு செயலரே, பல வீடுகள், இன்னோவா கார் என, சகல வசதிகளுடன் உள்ளனர். உங்கள் கட்சியில் மாவட்ட, மாநில அளவில் பொறுப்புகளில் உள்ளவர்கள், 'விசிட்டிங் கார்டு' கூட அச்சிட முடியாமல் பொருளாதாரத்தில் நலிவடைந்து உள்ளனர்.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தால், ஆட்சியை பிடிப்பது உறுதி. முதல் தேர்தலிலேயே உங்களுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும். சட்டசபை தேர்தலை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, நீங்கள் மக்கள் பிரநிதிகளாக வலம் வரலாம்; எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் சேர விஜயை வலியுறுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், மற்ற மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், தங்கள் மாவட்ட த.வெ.க., நிர்வாகிகளிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.