'எய்ட்ஸ்' தடுப்பு திட்ட ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது: தமிழக அரசு
'எய்ட்ஸ்' தடுப்பு திட்ட ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது: தமிழக அரசு
ADDED : டிச 13, 2025 12:46 AM
சென்னை: 'தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது' என, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எச்.ஐ.வி., நோயால், 1.40 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் கூட்டு மருந்து வழங்க, மாநிலம் முழுதும் 2,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தங்களுக்கு பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர், வரும் ஜன., 4ம் தேதி, சென்னையில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, ஊழியர்கள் நலச்சங்க தலைவர் ஜெயந்தி கடிதம் வாயிலாக திட்ட இயக்குநருக்கு தெரியப்படுத்தினார்.
அதற்கு, திட்ட இயக்குநர் சீத்தாலட்சுமி அனுப்பியுள்ள பதில்:
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், ஐந்து காலகட்டமாக நடந்து வருகிறது. தற்போது ஐந்தாவது திட்டம், 2026 மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.
இத்திட்டம், மத்திய அரசின் நிதி உதவியுடன் தான் இயங்கி வருகிறது. தமிழக அரசு நிதி எதுவும் பெறப்படவில்லை.
இதில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மாதாந்திர ஊதியம் பெற்றாலும், இத்திட்டம் செயல்படும் வரை மட்டுமே பணியாற்ற முடியும். இப்பணிகளை நிரந்தரப் படுத்தவோ, முறைப்படுத்தவோ முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

