இரண்டு கடல்களில் வளி சுழற்சி; ஒரு கடலில் புதிய அழுத்தம்
இரண்டு கடல்களில் வளி சுழற்சி; ஒரு கடலில் புதிய அழுத்தம்
ADDED : நவ 21, 2024 06:06 AM

சென்னை: 'குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தனித்தனி வளி மண்டல சுழற்சிகள் நிலவுவதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 17 செ.மீ., மழை பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரை பகுதிகளில் தலா 15; திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி 14; நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி 13 மற்றும் திருக்குவளையில் 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று உருவாகும் வளி மண்டல சுழற்சி, ஓரிரு நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.
இப்பின்னணியில், தமிழகத்தின் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கன மழை பெய்யும்.
எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 24 வரை, மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, படிப்படியாக வலுவடைய வாய்ப்புள்ளதால், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

