ஆந்திரா நோக்கி நகர்கிறது காற்றழுத்தம்; தமிழகத்தில் மழை எச்சரிக்கை வாபஸ்
ஆந்திரா நோக்கி நகர்கிறது காற்றழுத்தம்; தமிழகத்தில் மழை எச்சரிக்கை வாபஸ்
ADDED : டிச 19, 2024 05:31 AM

சென்னை : வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்பதால், தமிழகத்துக்கான மிக கன மழை எச்சரிக்கையை, வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தென்மேற்கு வங்கக் கடலில், நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இது படிப்படியாக வலுவடைந்து, தெற்கு ஆந்திரா நோக்கி இன்று நகரக்கூடும்.
இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்கள், இதர மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 24 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும், ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை வாபஸ்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் நேற்று கன மழை பெய்யக்கூடும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு இருந்தது. அதேபோன்று, இன்றைய கன மழை எச்சரிக்கையும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

