இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்; 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'
இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்; 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'
ADDED : ஜன 10, 2026 05:54 AM

சென்னை: வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இலங்கையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை மையத்தின் அறிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி, இலங்கையில் மட்டக்களப்புக்கு கிழக்கு, தென்கிழக்கில், 170 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில், 710 கி.மீ., தொலைவிலும் நிலவியது.
இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கையில் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே, இன்று மாலை கரையை கடக்கக்கூடும். தெற்கு கேரள கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

