ADDED : அக் 10, 2024 12:27 AM
சென்னை:தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும், 'ஏர்டெல்' நிறுவனம், வாடிக்கையாளருக்கு மொபைல் போன் அழைப்பு வரும்போது, 'ஸ்பேம்' எனப்படும் அவசியம் இல்லாத அழைப்பை தெரியப்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தமிழக தலைமை செயல் அதிகாரி தருண் விர்மானி கூறியதாவது:
இந்தியாவில் ஒருவருக்கு, ஒரு நாளைக்கு சராசரியாக, வங்கி மோசடி உள்ளிட்ட அவசியமில்லாத மூன்று அழைப்புகள் வருகின்றன.
நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக தினமும், 105 கோடி எஸ்.எம்.எஸ்.,களும், 205 கோடி அழைப்புகளும் வருகின்றன. இதனால், வாடிக்கையாளர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, ஏர்டெல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக, 'ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக, அவசியம் இல்லாத அழைப்புகளை, மொபைல் போனில் அழைப்பு மற்றும்எஸ்.எம்.எஸ்., வரும் போதே, 'ஸ்பேம்' என்று தெரிவிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவைக்கு கட்டணம்கிடையாது. தனி செயலியைபதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. எங்கள் நிறுவனத்திற்கு தமிழகத்தில், 3 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த, 12 நாட்களில் மட்டும், 11.20 கோடி அவசியம் இல்லாத அழைப்புகளும், 30 லட்சம் எஸ்.எம்.எஸ்.,களும் வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

